சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதிமுகவில் நிலவி வந்த இரட்டை தலைமை விவகாரத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது. மேலும், மூன்று மாதங்களுக்குள் பொதுக்குழுவைக் கூட்டி பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறியது.
இந்த நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இது பொதுக்குழு குறித்த வழக்கின் தீர்ப்பையடுத்து முதன்முறையாக மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டம் என்பதால் அனைவரின் எதிர்பார்ப்பும் ராயப்பேட்டையை நோக்கியுள்ளது. மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள், இடைத்தேர்தல் தோல்வி உள்ளிட்டவை குறித்தும், கடந்த சில நாட்களாக நிலவும் பாஜக - அதிமுக மோதல் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.