Skip to main content

எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஓமலூரில் ஆலோசனை

Published on 24/01/2023 | Edited on 24/01/2023

 

 Consultation with Edappadi Palaniswami administrators at Omalur

 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரசின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரைக் களமிறக்கத் தீவிரம் காட்டி வருகிறது.

 

இடைத்தேர்தல் தொடர்பாக நேற்று ஓ.பன்னீர்செல்வம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இருந்த நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டமானது இன்று நடைபெற்றது. பாஜக தன் நிலையைத் தெளிவுபடுத்தாத நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன; இடைத்தேர்தலில் வேட்பாளரைத் தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், காமராஜ், கே.பி.முனுசாமி, ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

 

சென்னையில் நேற்று நடந்த ஓபிஎஸ் தரப்பு ஆலோசனைக் கூட்டத்தில், ‘இபிஎஸ் வேட்பாளரை அறிவித்த பின் நாம் நம்முடைய வேட்பாளரை அறிவிக்கலாம்’ என ஓபிஎஸ் ஆதரவாளர்கள்  கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஈரோடு அதிமுக வேட்பாளரை கைது செய்ய வேண்டும்” - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
AIADMK candidate should be arrested says EVKS Elangovan

ஈரோடு தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை கைது செய்ய வேண்டும்,தேர்தல் தகுதி இழக்க செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், “ ஆற்றல் அசோக்குமார் ஈரோட்டில் ஒரு கிடங்கில் வாக்காளர்களுக்கு தர ஏராளமான புடவைகள் பதுக்கி வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் 200க்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்குகள் வைத்துள்ளார். அவருடைய சொத்து விபரங்களை இதர விஷயங்களையும் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ விசாரிக்கை வேண்டும். அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். கைது செய்யப்பட வேண்டும்.

தேர்தல் விதிகளின்படி தேர்தல் அறிவித்த பிறகு எந்த புதிய அறிவிப்பையும் அரசு வெளியிடக் கூடாது. ஆனால், அதை மீறி மோதி அரசு 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி உள்ளது. தேர்தல் ஆணையம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் பாஜக அரசின் பிடியில் உள்ளது. தமிழக பாஜக தலைவர்  கோவையில் இரண்டு விதமாக மனு தாக்கல் செய்துள்ளார். அனைத்து கட்சிகளும் இந்த குறைபாட்டை சுட்டிக்காட்டி உள்ளன. இருந்தாலும் தேர்தல் ஆணையத்திலிருந்து ஒரு தொலைபேசி வருகிறது. அதனைத் தொடர்ந்து அவர் வேட்புமனு ஏற்கப்படுகிறது.

தேர்தல் ஆணையம் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி ஏதேதோ பேசுகிறார். அவர் பேசுவது புரியவில்லை. தமிழகத்தில் கஞ்சா கலாச்சாரம் பரவிவிட்டதாக கூறுகிறார். எம்ஜிஆர் காலத்திலிருந்து கஞ்சா கலாச்சாரம் உள்ளது. கஞ்சா போதை வஸ்துக்கள் குஜராத்தில் அதானி துறைமுகம் மூலம் வருகிறது. பாஜக அரசு இளைஞர்கள் அனைவரும் இந்தியாவில் போதை கலாச்சாரத்துக்கு உட்பட இதை அனுமதிக்கிறது. குஜராத்தில் மதுவிலக்கு பேயரளவில் உள்ளது. பர்மிட் இருந்தால் மது வாங்கி குடிக்கலாம். முதலில் அங்கு மதுவிலக்கை கொண்டு வரட்டும். பின்னர் தமிழகத்தில் மதுவிலக்கே வலியுறுத்தலாம்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிட பணமில்லை என்கிறார். அவரிடம் ஏராளமான பணம் படுக்கையறையிலும் பைகளிலும் உள்ளது. அவரது கணவர் தேர்தல் பத்திர முறைகேடு உலகில் மிகப்பெரிய ஊழல் என்கிறார். கேட்டால் நிர்மலா சீதாராம் இது அவரது கருத்து என்கிறார். இதற்கு என்ன விளக்கம் அவர் அளிப்பார். சுப்பிரமணியசுவாமி அனுபவ வாய்ந்தவர் அவர் மோதி மீண்டும் பிரதமராக வரக்கூடாது என்கிறார். ஜெர்மனி அமெரிக்கா போன்ற நாடுகள் மோதி தலைமையில் சர்வாதிகாரத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது என்கின்றனர். 

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமித்ஷா கூட்டணி நாட்டில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். சிறையில் அடைக்கலாம் என்று செயல்படுகிறது. இதை தடுத்து நிறுத்த ஜனநாயகத்தை காப்பாற்ற இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். எனது உடல்நிலை காரணமாக தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் செய்ய வாய்ப்பு இல்லை. ஆனால் ஈரோட்டில் திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து பிரச்சாரம் செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.