
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் கடந்த சனிக்கிழமை டெல்லிக்குள் நுழைந்தது. இதில் பல சமயங்களில் ராகுல் காந்தியின் பாதுகாப்பில் குறைபாடுகள் இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் இருந்தது. அதே சமயத்தில் ராகுல் காந்தி z+ பாதுகாப்பு பெற்றவர் என்பதால் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதில் டெல்லி போலீசார் தோல்வியடைந்துள்ளனர்.
காங்கிரஸ் தொண்டர்கள்தான் ராகுல் காந்தியின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு வளையத்தை அமைத்து அவருக்கு உரிய பாதுகாப்பு அளித்தனர். ஹரியானா மாநில உளவுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் கடந்த 23ஆம் தேதி நுழைந்தனர். இது தொடர்பாக சோனா சிட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒற்றுமைப் பயணத்தில் கலந்து கொண்டவர்களிடம் கூட உளவுப்பிரிவினர் விசாரணை நடத்தி உள்ளனர். இந்திய ஒற்றுமைப் பயணம், நாட்டின் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வருவதற்கான பயணம். இந்தப் பயணத்தில் பாஜக பழிவாங்கும் அரசியலில் ஈடுபடக்கூடாது.
நாட்டின் ஒற்றுமைக்காக இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி என தலைவர்களைத் தியாகம் செய்த கட்சி காங்கிரஸ் என்பதை மறக்கக்கூடாது. இந்த ஒற்றுமைப் பயணம் இனி பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களுக்குச் செல்ல இருக்கிறது. அங்கே நுழையும்போது ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்" என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.