சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் 138 ஆவது நிறுவன நாள் விழாவில் கக்கனின் மார்பளவு சிலை திறக்கப்பட்டது. இத்திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டார்.
இதன் பின் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் இந்தியாவின் ஒற்றுமைக்காக, வளர்ச்சிக்காக உழைத்த கட்சி. ஆசிய நாடுகளில் வல்லரசாக இந்தியா மாறியிருக்கிறது எனச் சொன்னால் அதற்கு காங்கிரஸ் கட்சி, நேரு, இந்திரா காந்தி என்பதை யாராலும் மறுக்க முடியாது.
காங்கிரஸ் தன்னுடைய மூன்று தலைவர்களை இழந்துள்ளது. காந்தியை கொலை செய்தார்கள். இந்திரா காந்தி, ராஜிவ் காந்தியை கொலை செய்தார்கள். எந்த அரசியல் கட்சியில் மூன்று தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். சொத்து தகராற்றில் கொலை செய்யப்பட்டனரா. அவர்கள் இருந்தால் இந்தியா வளர்ச்சி அடையும் என்ற அச்சத்தில் அவர்கள் கொலை செய்யப்பட்டனர்.
நாங்கள் இவ்வளவு தியாகத்தைச் செய்துள்ளோம். எங்களைக் குறை சொல்லும் நட்டாவும் நட்டாவின் தலைவர்களும் நாட்டின் விடுதலைக்காக ஒரு மணிநேரம் சிறை சென்றுள்ளார்களா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.