நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் ராகுல்காந்தி. அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் அவரை சமாதானப் படுத்த முயற்சித்தனர் காங்கிரஸின் மூத்த தலைவர்கள். அதனை ஏற்காமல் தனது முடிவில் உறுதியாக இருந்தார் ராகுல்.
இதனையடுத்து சோனியாவிடம் பஞ்சாயத்துப் போனது. அவரும், " ராகுலின் முடிவில் தலையிட விரும்பவில்லை. நேரு குடும்பத்தை விட்டு வெளியிலிருந்து ஒருவரை தலைவராகத் தேர்ந்தெடுங்கள்" என கறாராகத் தெரிவித்திவிட்டார். இந்த நிலையில் மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் மூன்று முறை நடந்தது. ஆனால், தலைவர் பொறுப்பை ஏற்க மூத்த தலைவர்கள் யாரும் முன்வரவில்லை.
அதேசமயம், ராகுலும் தனது முடிவில் உறுதியாக இருப்பதைத் தொடர்ந்து , கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் தங்களின் கட்சி பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். இதனால் காங்கிரஸ் கட்சி மீதான நம்பிக்கை அதன் தோழமை கட்சிகளிடத்தில் குறைந்து வருகிறது.
இந்தச்சூழலில், அண்மையில் சோனியா காந்தியை மீண்டும் சந்தித்த மூத்த தலைவர்கள், "கட்சியின் தலைவர் பதவிக்கு நீங்கள் மீண்டும் வர வேண்டும். இல்லையேல் உங்கள் கண் முன்னே கட்சி காணாமல் போகும். கட்சியை காப்பாற்ற உங்களால் மட்டுமே முடியும். அதனால் மீண்டும் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையேல், தகுதியான ஒருவரை அடையாளப் படுத்துங்கள் " என கெஞ்சியுள்ளனர். சோனியாவும் யோசிக்கத் துவங்கியிருப்பதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன.