தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், கட்சியில் இருந்து விலகி மீண்டும் இணைந்தவர்களுக்குத் தேர்தலில் வாய்ப்பு தர எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், எம்.பி.யுமான விஷ்ணு பிரசாத் தலைமையில், காங்கிரஸ் கட்சியினர், கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (13/03/2021) காலை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். அதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு ஆதரவு தெரிவித்து மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் தலைமையிலான கட்சியினரும், அதே அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். மேலும், விஜயதரணி எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் எம்.எல்.ஏ. சீட் தரக்கூடாது என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினரும், கட்சியின் தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். இதனால் சத்தியமூர்த்தி பவனில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
காங்கிரஸ் கட்சியினரின் போராட்டத்தால், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விஷ்ணு பிரசாத் எம்.பி.க்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் மாணிக்தாகூர், விஷ்ணு பிரசாத்தின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளைப் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விஷ்ணு பிரசாத் எம்.பி.யை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்துப் பேசினார். அவரிடம் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தை விஷ்ணு பிரசாத் எம்.பி. முடித்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த விஷ்ணு பிரசாத் எம்.பி., "எனது கருத்துகளை மேலிடத்திற்குத் தெரிவிப்பதாக தமிழக தலைவர்கள் கூறியுள்ளனர். எனது கோரிக்கைகள் நிறைவேறும் என நம்பிக்கை உள்ளது" என்றார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, "எம்.பி. விஷ்ணு பிரசாத்தின் கருத்துகள் தலைமையிடம் சொல்லப்பட்டுள்ளது; தலைமை பரிசீலிக்கும்" எனத் தெரிவித்தார்.