நெல்லையில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடைசியாக 2021 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. மேலும் சில பல்கலைக்கழகங்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. அதேபோல் 2022 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது. மற்ற பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை.
ஜூன் 16 ஆம் தேதி சென்னை பல்கலைக்கழகத்திற்கும், ஜூன் 28 ஆம் தேதி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கும், ஜூன் 19 ஆம் தேதி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கும், ஜூலை 7-ஆம் தேதி நாகையில் உள்ள ஜெயலலிதா மீனவப் பல்கலைக்கழகத்திற்கும் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை., பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழா ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்கள் வருவார்கள். இதுவரை தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள். ஆனால் ஆளுநருக்கு மத்திய அமைச்சரிடம் தேதி வாங்கி அவர்களை அழைத்து வந்து நடத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அவர்கள் தேதி கொடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. அதனால் பாதிக்கப்படுபவர்கள் மாணவர்கள். மத்திய அமைச்சர்கள் வந்தாலும் வரவில்லை என்றாலும் துணை வேந்தர்கள், தமிழக அமைச்சர்கள் என யாரையாவது அழைத்து நடத்துவதில் தவறு இருக்க முடியாது.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2019-2020 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குத்தான் கொடுத்துள்ளார்கள். பட்டப் படிப்புக்கான சான்று கொடுக்கவில்லை என்றால் மணவர்களுக்கு பாதிப்பு தான். சர்வதேச அளவில் படிப்பை மேம்படுத்த வேண்டும். இங்கிருப்பவர்கள் வெளியில் செல்ல வேண்டும். வெளியில் இருப்பவர்கள் இங்கு வர வேண்டும். வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகளவு இருக்கிறார்கள். வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் டிகிரி சான்றிதழ் தான் கேட்கிறார்கள். எனவே அதை கொடுக்காததினால் மாணவர்களுக்கு பாதிப்பு உருவாகிறது. இதில் எங்களை கேட்பது இல்லை. தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தல் இல்லாமல் நடைபெறும் நிகழ்ச்சி இது.
இன்று மொத்தமாக 9 லட்சத்து 29 ஆயிரத்து 542 பேர் கல்வியில் தேர்ச்சி பெற்றுப் பட்டமளிப்பிற்காக காத்திருக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் தான் 2022 ஆம் ஆண்டு பொறியியல் கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்துள்ளது. மீதமுள்ள 12 பல்கலைக்கழகங்களில் 2022 ஆம் ஆண்டில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை” எனக் கூறினார்.