Skip to main content

"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை; கெடுக்கலாமா என்று சதி செய்கிறார்கள்" - முதல்வர் ஸ்டாலின்

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

cm stalin talk about law and order issue

 

தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை. ஆனால் கெடுக்கலாமா என்று சிலர் சதி செய்கிறார்கள் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (29.11.2022) அரியலுார் மாவட்டம்  கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கான முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

அதன் பின் பேசிய அவர், "கடந்த ஆட்சியில், பத்தாண்டுக் காலம் தொழில் வளர்ச்சியில் தேக்க நிலை நிலவினாலும் அதற்கு முன்பு தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு போட்ட அடித்தளத்தாலும், கடந்த 18 மாதங்களாக எட்டுக் கால் பாய்ச்சலில் நாம் ஈர்த்து வரும் முதலீடுகளாலும் பெற்ற பெருமைதான் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். நான் இப்போது கூறிய இரண்டுமே தனித்தனி நிகழ்வுகள் அல்ல. ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது. 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாகத் தமிழ்நாட்டை உயர்த்துவோம் என்ற இலக்கின் வெவ்வேறு பரிமாணங்கள்தான் இவை.

 


நான் முதல்வன் திட்டமானாலும்; ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்களை 2 ஆயிரத்து 200 கோடி ரூபாயில் தொழில்நுட்ப மையங்களாக மேம்படுத்துவதானாலும்; பள்ளிக்கல்வியிலும், உயர்கல்வியிலும், நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகளானாலும்; புதிதாக வளர்ந்து வரும் உற்பத்தித் துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதானாலும்; நான்காம் தொழிற்புரட்சியை ஒட்டிய முயற்சிகள் ஆனாலும் – அனைத்துமே நம் இலக்கை நோக்கிய ஒருங்கிணைந்த திட்டமிடலின் அங்கங்கள்தான். இத்தகைய தொலைநோக்குப் பார்வையோடு திட்டமிட்டால்தான், இலக்கை அடையமுடியும். 

 

இதில் அரியலூர், பெரம்பலூர் என அனைத்து மாவட்டங்களின் பங்களிப்பும் இருக்கவேண்டும். அனைத்துத் தரப்பினரும் பயன்பெற வேண்டும். அடுத்த சில ஆண்டுகளில் பின்தங்கிய பகுதி, மாவட்டம் என்று எதுவும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது. அதை நோக்கித்தான் உழைத்து வருகிறோம். இவை அனைத்தும் ஒரு ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திமுக அரசு நடத்திக் காட்டும் செயல்கள். ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது – ஒரு முதலமைச்சர் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த கால ஆட்சி.

 

தனது கையில் அதிகாரம் இருந்தபோது கைக்கட்டி வேடிக்கை பார்த்துவிட்டு தனது கையாலாகாத தனத்தை வெளிப்படுத்தி பத்தாண்டுக் காலத்தை நாசமாக்கியவர்கள். இன்று இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கிறார்கள். பேட்டிகள் அளிக்கிறார்கள். அதையெல்லாம் மக்கள் பார்த்துச் சிரிக்கிறார்கள். 'உங்கள் யோக்கியதைதான் எங்களுக்குத் தெரியுமே' என்று ஏளனமாகச் சிரிக்கிறார்கள்.  தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை. ஆனால், கெடுக்கலாமா என்று சிலர் சதி செய்கிறார்கள். ஐயகோ கெடவில்லையே என்று சிலர் வருத்தப்படுகிறார்கள்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாதை சரியானதே - இன்னும் வேகமாய் நடைபோடுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
The path is right let's walk faster CM MK Stalin

தமிழக மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் இன்று (12.03.2024) தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து மாநில திட்டக்குழுவில் கடந்த நான்கைந்து மாதங்களில் நாம் மேற்கொண்ட ஆய்வுப் பணிகள் குறித்த மொத்தம் 11 அறிக்கைகள் வழங்கியிருக்கிறோம். அந்த அறிக்கைகளை நான்கு வகைப்படுத்தலாம். ஒரு வகை என்னவென்றால் அரசின் திட்டங்கள் எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்து அதற்குண்டான அறிக்கையை அரசுக்கு அளிப்பது. பொதுவாக அரசின் திட்டங்கள் அது எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கான ஆய்வு. அதற்குப் பிறகு அரசு மாறி வரும் கால சூழலில் என்னவெல்லாம் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பயனாளிகள், பயனாளிகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் இந்தத் திட்டத்தைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி முதல் ஆய்வு ஆகும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வயிற்றுப் பசியுடன் வரும் குழந்தைக்கு அறிவுப்பசி எங்ஙனம் ஏற்படும்? துடைத்தெறிவோம் அப்பசியை நாளைய தலைமுறை நலமாக என முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கொண்டு வந்தோம். மாணவர்களின் வருகை அதிகரிப்பு, குடும்பத் தலைவிகளின் பணிச்சுமைக் குறைப்பு என அதன் பலன்களை இன்று மாநிலத் திட்டக்குழுத் துணைத் தலைவரும், பொருளாதார அறிஞருமான முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் அடுக்கடுக்காய்ப் பட்டியலிட்டபோது, நம் பாதை சரியானதே - இன்னும் வேகமாய் நடைபோடுவோம் என்ற உற்சாகம் பிறந்தது” எனக் குறிப்பிடுள்ளார்.  இதற்கான காணொளி ஒன்றையும் இணைத்துள்ளார்.

அதில், “காலை உணவுத் திட்டத்தினால் பள்ளிக்கூடங்களில் 100 சதவிகித சேர்க்கைக்கு வந்துவிட்டோம். புதிதாக சேர்ப்பது என்பது பெரிய விஷயம் கிடையாது. இப்போது என்ன பிரச்சனை என்றால், வருகைப் பதிவு என்பது முன்பு 60 சதவீதம். 70 சதவீதம் சாதாரணமாக இருக்கும். காலை உணவுத் திட்டம் வந்த பிறகு, சாதாரணமாக 90 முதல் 95 சதவீதம் ரொம்ப சுலபமாக இருக்கிறது. இரண்டாவதாக, பள்ளிக் குழந்தைகள் பள்ளிக் கூடத்திற்கு போகமாட்டேன் என்று அடம் பிடிப்பதில்லை. குழந்தைகள் 9 மணிக்கு பள்ளிக்கூடம் என்பது தற்போது 7.30 மணி முதல் 8 மணிக்குள் பள்ளிக்கூடம் செல்வது சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. மூன்றாவதாக, குழந்தைகள் காலை உணவை விரும்பி சாப்பிடுவதாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் சொல்கிறார்கள். ஆசிரியர்கள் சொல்லக்கூடிய விஷயம் என்னவென்றால், குழந்தைகள் மிகவும் சோர்வாகவும், மயக்கத்தோடும் தற்போது எதுவும் இல்லை என்று சொல்கிறார்கள். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், குழந்தைகள், பள்ளிக்கூடத்தில் தரும் உணவு போல ஏன் வீட்டில் தருவதில்லை என்று பெற்றோர்களிடம் கோரிக்கை வைக்கிறார்கள். பெற்றோர்கள், குழந்தைகள் அதை சொல்வதாக சொல்கிறார்கள். 

The path is right let's walk faster CM MK Stalin

இதற்கு முன்பு ஒரு ஆய்வு செய்தோம். அதனுடைய தாக்கம் எப்படி இருந்தது என்றால் மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் வருகைப் பதிவு அதிகரிப்பது என்பது அந்த தரவிலிருந்து தெரிகிறது. அதையும் மாநில திட்டக் குழுவின் மூலமாக ஆய்வு செய்து கூறினோம். தற்போது ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளபடி, அரசு உதவி பெறும் பள்ளிக் கூடங்களுக்கும் இந்தத் திட்டம் விரிவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக தாய்மார்களிடம் இருந்து பெரிய வரவேற்புப் பெற்றிருக்கிறது. காலை எழுந்தவுடன் குழந்தைகளை எழுப்பி, சாப்பாடு வழங்கி அவர்களை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவது என்பது ஒரு தனி வேலை. அந்த வேலையிலிருந்து பெரிய அழுத்தத்திலிருந்து விடுதலை ஆகிவிட்டோம் என்பது பெற்றோர்கள் கூறும் கருத்து. இரண்டாவதாக, குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு சந்தோஷமாக செல்கிறார்கள். இவை இரண்டும் தான் மிகவும் குறிப்பாக சொல்ல வேண்டிய கருத்து. மூன்றாவதாக, குழந்தைகள் சாப்பிட்டார்களா, சாப்பிடவில்லையா என்பது பெற்றோர்களின் கவலையாக இருந்தது. இப்போது அந்த கவலை இல்லை என்று சொல்கிறார்கள். தற்போது, நிம்மதியாக இருப்பதாக கூறுகிறார்கள். இவையெல்லாம் ஆய்வு செய்ததிலிருந்து கிடைத்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

பிரதமர் மோடியின் தமிழக பயணத் திட்டத்தில் திடீர் மாற்றம்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Sudden change in Prime Minister Modi's Tamil Nadu travel plan

பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கடந்த பிப்ரவரி 27 மற்றும் 28 ஆம் தேதி தமிழகம் வந்திருந்தார். அதன்படி 27 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனையடுத்து இரண்டாவது நாளாக கடந்த 28 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி கடந்த 4 ஆம் தேதி (04-03-2024) ஒருநாள் பயணமாகத் தமிழகம் வந்திருந்தார். அதன்படி கல்பாக்கம் அதிவேக ஈனுலை மின் உற்பத்தியின் தொடக்கப் பணிகளைப் பார்வையிட்டதுடன், 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலையில் கோர் லோடிங் பணியைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்பின்னர் சென்னை நந்தனம் மைதானத்தில் நடைபெற்ற பா.ஜ.க.வின் தாமரை மாநாடு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்தில் 3 நாட்கள் பயணம் மேற்கொள்ள இருந்தார். அதாவது 15 ஆம் தேதி சேலத்திற்கும், 16 ஆம் தேதி கன்னியாகுமரிக்கும், 18ம் தேதி கோவைக்கும் பிரதமர் மோடி செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக சுற்றுப்பயணத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மார்ச் 15 ஆம் தேதி பிரதமர் மோடி சேலம் வருவதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மார்ச் 19 ஆம் தேதி வருவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 4 முறை பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ள நிலையில் மார்ச் 19 ஆம் தேதி 5வது முறையாக வர உள்ளார்.

முன்னதாக இந்தியத் தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை நேற்று முன்தினம் (09.03.2024) ராஜினாமா செய்திருந்தார். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார், ஆணையர்களாக அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பதவி வகித்து வந்தனர். இதனிடையே அனுப் சந்திர பாண்டே பணி ஓய்வு பெற்ற நிலையில் இந்த காலியிடம் நிரப்பப்படாமல் இருந்து வந்தது. அதே சமயம் மற்றொரு தேர்தல் ஆணையர் அருண் கோயலின் பதவிக் காலம் 2027 ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் தேர்தல் ஆணையர் காலி இடங்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. மேலும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே தற்போது பதவியில் உள்ளார். புதியதாக இரு தேர்தல் ஆணையர்களை நியமிப்பது குறித்து மார்ச் 15இல் மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இணைந்து தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.