திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் 6வது நினைவு நாள் நாளை மறுநாள் (07.08.2024) அனுசரிக்கப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாகத் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 7 அன்று அமைதிப் பேரணி நடைபெற உள்ளது.
இந்த அமைதிப் பேரணி சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகில் காலை 7 மணிக்குத் தொடங்க உள்ளது. அதன் பின்னர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் பேரணி நிறைவடைய உள்ளது. அங்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் வளையம் வைத்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்த பேரணியில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “என்றும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் பேராற்றலாம் கலைஞரின் ஆறாவது நினைவு நாள், ஆகஸ்ட் 7-ஆம் நாள் ஆகும். ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் உருவச் சிலை அருகிலிருந்து, அவர் நிரந்தர ஓய்வெடுக்கும் கடற்கரை நினைவிடம் வரை உங்களில் ஒருவனான என் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற இருக்கிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் உள்ள திமுக அலுவலகங்களில் கலைஞரின் உருவப் படத்திற்கு மாலையிட்டு மலர் தூவி நன்றியினைச் செலுத்துங்கள். திமுக தொண்டர்கள் அவரவர் வீடுகளில் கலைஞருக்கு நன்றியைச் செலுத்துங்கள். என்றென்றும் அவர் நம் உள்ளத்திற்குத் தரும் உத்வேகத்துடன் நம் இலட்சியப் பயணத்தைத் தொடர்வோம். மக்கள் பணியாற்றித் தொடர் வெற்றிகளைக் குவிப்போம்.
கலைஞரின் வரலாற்றையும் ஒரு நூற்றாண்டு கால தமிழ்நாட்டின் வரலாற்றையும் விளக்கும் வகையிலான அதிநவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள 'கலைஞர் உலகம்' எனும் அருங்காட்சியகத்தை உள்ளடக்கிய பேரறிஞர் அண்ணா - கலைஞர் நினைவிடங்கள் அமைந்துள்ள இடத்தை இந்தக் குறுகிய காலத்திற்குள் தமிழ்நாட்டிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சமாகும். தங்கள் தலைமுறையை வாழவைத்த கலைஞருக்குத் தமிழர்கள் செலுத்தும் நன்றிக் காணிக்கை இது. நம் உயிர் நிகர்த் தலைவருக்கு நாமும் நம் நன்றிக் காணிக்கையைச் செலுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார். கலைஞரின் நினைவிடத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி (26.02.2024) திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.