பல்வேறு பரபரப்புகளை கடந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததிலிருந்து தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றார். ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் அதிமுவின் தென்னரசுவிற்கு இடையேயான வாக்கு வித்தியாசம் 66 ஆயிரத்து 675 வாக்குகளாக உள்ளது. காங்கிரசின் வெற்றியை இமாலய வெற்றியாக திமுக கூட்டணி கட்சியினர் கொண்டாடினர்.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ''ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் 'இடைத்தேர்தல்களில் சமீபகாலமாக பணநாயகம்தான் வென்றது. ஜனநாயகம் வென்றதில்லை. ஆளும் கட்சி தான் முறைகேடு செய்து வெற்றி பெறுவார்கள்' என எடுத்துக்காட்டாக சொல்லியிருந்தார். அவர் சொன்னதையே நாம் எடுத்துக் கொள்ளலாம். அது மட்டும் அல்ல திமுகவை பார்த்து திமுகவின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சகாக்களும் எந்த அளவுக்கு பயந்து இருக்கிறார்கள் என்பதற்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த தேர்தல் ஒரு எடுத்துக்காட்டு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் 24 ஆம் தேதி வரை ஏறத்தாழ 28 நாட்கள் 30 அமைச்சர்கள், குறிப்பாக வயது முதிர்ந்த அமைச்சர்கள் எ.வ.வேலு, துரைமுருகன் கூட வந்து போய்விட்டார்கள். அது மட்டுமல்ல, அமைச்சர்கள் வீடு வீடாகப் படியேறிச் சென்று எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற வகையில் ஒரு கடினமான பணியை மேற்கொண்டார்கள். நாங்கள் தேர்தல் களத்தில் இருந்ததன் அடிப்படையில் எங்களுக்கு தெரியும். உடல் நலக்குறைவாக இருக்கக்கூடிய வேலூர் மாவட்ட அமைச்சர் காந்தி கூட உடல்நலனை பொருட்படுத்தாமல் 27 நாட்கள் பணியில் ஈடுபட்டார்.
ஈரோட்டு மக்களைப் பட்டியில் அடைப்பது; பின்னர் திறந்து விடுவது; திரும்ப 9 மணிக்கு அனுப்புவது; இவர்களுக்கு வேண்டிய உணவு, தண்ணீர், ஸ்னாக்ஸ் என ஒரு தியேட்டர் மாதிரி ஏறத்தாழ 30 இடங்களில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு அலுவலகம் என்ற போர்வையில் நடத்தி மக்களை ஆடு மாடு போல அடைத்து வைத்து பணத்தைக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளனர். கோழிக்கறி என்றால் 2 கிலோ, மட்டன் என்றால் ஒரு கிலோ என, இப்படி எல்லாம் கொடுத்து இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கிறார்கள்'' என்றார்.