Skip to main content

சென்னை மண்டல திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம்; ஏற்பாடுகள் தீவிரம் 

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

 Chennai Zone DMK Polling Officers Meeting

 

திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (பி.எல்.ஏ 2) கூட்டம் டெல்டா மண்டலம், மேற்கு மண்டலம், தென் மண்டலம், வடக்கு மண்டலம் என 4 பகுதியாக நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

 

அதனைத் தொடர்ந்து சென்னை மண்டலம் (சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்) பயிற்சி பாசறை மாநாடு நவம்பர் 5 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம், மேற்கு மாவட்டத்திலுள்ள பூண்டி ஐ.சி.எம்.ஆர் திடலில் நடைபெறுகிறது. இதற்கான பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக 100 ஏக்கரில் கூட்டம் நடைபெறும் அரங்கம், உணவு அரங்கம், விவிஐபிகளுக்கான உணவு அரங்கம் போன்றவை தனித்தனியே அமைக்கப்பட்டு வருகின்றன.

 

இதற்கான ஏற்பாடுகளைத் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான காந்தி தலைமையில், திருவள்ளூர் மாவட்டச் செயலாளரும், திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ சந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். சுற்றுச்சூழல் அணியின் மாநில துணைச் செயலாளர் வினோத் காந்தி அங்கேயே இருந்து மாவட்டச் செயலாளர் மற்றும் நிர்வாகிகளோடு சேர்ந்து ஏற்பாடுகளைக் கவனித்து வருகிறார்.

 

 Chennai Zone DMK Polling Officers Meeting


இந்த மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் 37 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளிடக்கிய 7 நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 11,569 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்துகொள்கின்றனர். இவர்களுக்குத் தனியே அடையாள அட்டை உருவாக்கப்பட்டுள்ளன, அடையாள அட்டை இருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு தொகுதி பொறுப்பாளர்களும் சரியாக வந்து அமரும் வகையில் கூட்ட அரங்கத்தில் இடங்கள் பிரிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இவர்களோடு 4 மாவட்டங்களைச் சேர்ந்த மாநகரச் செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் எனத் தனியே இரண்டாயிரம் பேர் கலந்துகொள்கின்றனர். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் என 14 ஆயிரம் பேருக்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

 

திருச்சியைச் சேர்ந்த ஹக்கீரம் பிரியாணி சமையல் கலைஞர் தலைமையிலான குழுவினரிடம் உணவு தயாரிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் 14 ஆயிரம் பேர், மாவட்டக் கழக தொண்டர்கள், உள்ளுர் பொதுமக்கள் என 20 ஆயிரம் பேருக்கு உணவு சமைக்கப்படவுள்ளது. மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி, முட்டை, மீன் என அசைவ உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 

தமிழகத் தலைநகரமான சென்னை உள்ளடக்கிய மாவட்டங்களின் மண்டலக் கூட்டம் என்பதால் மற்ற கூட்டங்களை விட இந்தக் கூட்டத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் நிகழ்ச்சி நடைபெறவுள்ள இடத்துக்கு நேரில் சென்று நடைபெறும் பணிகள் குறித்து கழக அமைப்பு துணைச் செயலாளர் அன்பகம் கலை நேரில் சென்று ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.

 


 

சார்ந்த செய்திகள்