தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் நேற்று தனி விமானம் மூலம் சென்னை வந்தார். இன்று மாலை 4 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார். ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், காங்கிரஸ், பாஜகவுக்கு பெரும்பான்மை அமையாத பட்சத்தில் அப்போது எடுக்க வேண்டிய முடிவு குறித்து சந்திரசேகர் ராவ் ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த வாரம் கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக ஒடிசா முதலமைச்சர் நவீன்பட்நாயக், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்தார்.
இந்நிலையில், இன்று ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை ஸ்டாலின் முன்மொழிந்திருக்கும் நிலையில், மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் சந்திரசேகர் ராவுடனான இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.