மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடைபெற்றுவருகிறது. 230 தொகுதிகள் கொண்ட அந்த மாநில சட்டமன்றத் தேர்தல் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரே கட்டமாக நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களையும், பா.ஜ.க. 109 இடங்களையும் கைப்பற்றியது. இதில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களுடன் தனிப்பெரும்பான்மையுடன் கமல்நாத் தலைமையில் ஆட்சி அமைத்தது.
இந்நிலையில், 15 மாதங்களில் காங்கிரஸில் இருந்து 22 எம்.எல்.ஏ.க்கள் விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர். இதனால், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதனைத் தொடர்ந்து முதல்வரான கமல்நாத் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து சிவராஜ் சிங் சவுக்கான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைத்து செயல்பட்டுவருகிறது.
இந்நிலையில் மத்தியப் பிரதேசம் மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. இதனை எதிர்கொண்டு இழந்த ஆட்சியை பிடிக்க காங்கிரஸும், இருக்கும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.க.வும் தீவிரமாக இயங்கிவருகிறது.
இந்நிலையில், மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. டைம்ஸ் நவ் - நவ் பாரத் இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் தற்போது ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. 42.8% வாக்குகளுடன் 102 முதல் 110 இடங்களை கைப்பற்றவும், 43.80% வாக்குகளுடன் 118 முதல் 128 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இதரக் கட்சிகள் 13.40% வாக்குகளுடன் 0 முதல் 2 இடங்களை கைப்பற்றவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.