மதுரை நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மக்கள் குறை தீர்ப்பு மற்றும் திட்டப்பணிகள் ஆய்வு முகாம் எம்.பி. சு.வெங்கடேசன் முன்னிலையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டல எண் 4 இல் குறைதீர்ப்பு முகாம் மற்றும் திட்டப்பணிகள் ஆய்வு நடந்தது. இந்நிகழ்வில் மாநகராட்சியின் அனைத்து அதிகாரிகளும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மின்சார வாரியம் என நிர்வாக ரீதியிலான அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி. சு.வெங்கடேசன், “ஒடிசா ரயில் விபத்தினை தொடர்ந்து தொடர்ச்சியாக விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. ஒடிசா விபத்துக்கு பிறகு நடக்கும் விபத்துகள் மட்டுமல்ல, இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடக்கும் சூழலை மத்திய அரசின் கொள்கைகள் ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவை நாம் பார்க்கிறோம். மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை ரயில்வே துறைக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் ரயில்வேயின் அனைத்து பிரச்சனைகளையும் நாம் அலசி ஆராய்ந்துள்ளோம். ஆனால் இப்போது ரயில்வேக்கென்று தனி பட்ஜெட் கிடையாது. பொது பட்ஜெட்டில் ரயில்வேக்கு ஒதுக்கப்படும் மொத்த நிதியின் குறியீடு மட்டும் தான் இருக்கும். அதன் பின் 10 நாட்களுக்கு பின் பிங்க் புத்தகம் வெளியிடப்படும். அந்த புத்தகத்தில் எந்த திட்டம், எவ்வளவு நிதி என அலசி ஆராய்வதற்குள் அந்த கூட்டத்தொடரே முடிந்திருக்கும். எனவே ரயில்வே துறையின் பல திட்டங்கள் பொதுப்பார்வைக்கு வராமலேயே இருட்டடிப்பு செய்யப்படுகிறது.
விமானத்துறையாக இருந்தாலும் சரி, ரயில்வே துறையாக இருந்தாலும் சரி, அவற்றின் மீது நாடாளுமன்றத்தில் நடத்தப்பட வேண்டிய விவாதங்கள் எதுவும் நடக்கவில்லை. அவை அனைத்தும் திரை மறைவுக்கு பின்னால் கொண்டு செல்லப்பட்டது. அதனுடைய விளைவுகள் தான் இது. இன்று எழுப்பப்படும் பல கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரயில்வே துறையின் ஆலோசனை குழு கூட்டம் ரயில்வே அமைச்சரின் தலைமையில் நடந்தது. ஆலோசனை குழுவின் உறுப்பினர் நான். 13 ஆயிரம் இன்ஜின்கள் ரயில்வே துறையில் இயங்குகிறது. அதில் 65 இன்ஜின்களில் மட்டுமே கவாச் இயந்திரம் பொருத்தப்பட்டது என்பது அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம். இந்த ஒரு வருடத்தில் எத்தனை இன்ஜின்களில் பொருத்தியுள்ளீர்கள் என நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் எனக் கேட்டுள்ளோம். கேட்டு 10 நாட்கள் ஆகிவிட்டது. இன்று வரை மத்திய அரசு எந்த பதிலும் வழங்கவில்லை” என்றார்.