அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் சனிக்கிழமை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானங்கள் நிறைவேற்றியது. அதோடு பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் அறிவித்தது. ஆனால் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தமிழக அரசிடம் இருந்து பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு ஒரு கடிதம் கூட வரவில்லை என்று கூறுகிறார்.
அப்படி என்றால் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவது உண்மையா, தமிழக அரசு கூறுவது உண்மையா? உடனடியாக எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் இதற்கு பதில் அளிக்க வேண்டும். இதற்கு அவர்கள் என்ன பதில் கூறப்போகிறார்கள் என்று நாட்டு மக்களே எதிர்பார்க்கின்றனர். நான் பாரத பிரதமராக இருப்பவரை மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் பிரதமர் மோடி தமிழக மக்களை மதிக்காமல் ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்றதை பார்த்த பின்பு கருப்பு கொடி போராட்டங்கள் சரியானதுதான் என தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.