இந்திய நாடாளுமன்றத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்படத் துவங்கியுள்ளன. பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் எனப் பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் ஒரு கூட்டணியைத் துவக்கி அதற்கு இ.ந்.தி.யா. எனப் பெயர் வைத்து தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியை அமைக்க வேண்டும் என பா.ஜ.க. உட்பட அதன் கூட்டணிக் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகளில் ஒன்றான ஆளும் தி.மு.க. தற்போது இ.ந்.தி.யா. கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. அதேபோல், பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்து வந்த அ.தி.மு.க., என்.டி.ஏ. கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது. இதனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தமிழ்நாட்டில் தனித்து போட்டியா அல்லது வேறு சில கட்சிகளுடன் கூட்டணி அமைக்குமா எனும் பேச்சுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் முன்னெடுக்க வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ், வரும் 12 ஆம் தேதி சென்னைக்கு வருகிறார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உத்தரவின் பேரில் சென்னைக்கு வரும் பி.எல். சந்தோஷ், தமிழக பா.ஜ.க.வின் நாடாளுமன்றத் தொகுதிகள் சார்ந்த நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. நிர்வாகிகளின் செயல்பாடுகள், வேட்பாளர்கள், கூட்டணி, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எனப் பல்வேறு விஷயங்கள் பற்றி ஆழமாக விவாதிக்கிறாராம் சந்தோஷ். இந்த ஆலோசனையின்படி ஒரு ரிப்போர்ட் தயாரிக்கப்பட உள்ளது. அதன்படிதான் முடிவுகள் எடுக்கத் தீர்மானித்துள்ளதாம் பா.ஜ.க. மேலிடம். மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் பலருக்கும் டோஸ் விழும் என்றும் பா.ஜ.க.வின் உள்வட்டங்களோடு தொடர்பில் இருப்பவர்களிடம் எதிரொலிக்கிறது.