நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே கட்சியில் சீனியர்கள் ஓரம் கட்டப்படுவதாகவும் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அனைத்திலும் தன்னையே அண்ணாமலை முன்னிறுத்திக் கொள்வதாகவும் சமீபகாலமாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தமிழக பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவிலிருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இவரைத் தொடர்ந்து ஐ.டி.விங் செயலாளர் திலிப் கண்ணனும், ஓ.பி.சி மாநிலச் செயலாளர் ஜோதியும் பாஜகவிலிருந்து விலகி எடப்பாடி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவடைந்த நிலையில் மூன்று முக்கியப் பொறுப்பாளர்களும் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “கட்சியிலிருந்து அவர்கள் சென்றது நல்லதுதான். அப்போதுதான் புதிய ஆட்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியும். ஒரு காலத்தில் திராவிடக் கட்சிகளைச் சார்ந்து தான் பாஜக வளரும் என்றும் அந்த கட்சிகளில் இருந்து ஆட்களை கொண்டு வந்தால்தான் வளர முடியும் என்றும் பேசப்பட்டது. ஆனால், இப்போது பாருங்கள், பாஜகவில் இருக்கும் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நிர்வாகிகளைச் சேர்த்துத்தான் அவர்கள் வளர வேண்டும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இன்னும் யாரை வேண்டுமானாலும் அவர்கள் அதிமுகவிற்குள் இழுக்கட்டும். ஒவ்வொரு வினைக்கும் கண்டிப்பாக ஒரு எதிர்வினை இருக்கும். அதற்கான நேரமும் காலமும் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்” எனக் கடுமையாகப் பேசியிருந்தார்.
ஓரிரு தினங்களுக்கு முன் சென்னை அமைந்தகரையில் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, பாஜக தமிழ்நாட்டில் வளர திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்று பேசியதாகச் சொல்லப்படுகிறது. அவர் தனது மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகப் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து பாஜக - அதிமுக மோதல் மற்றும் அண்ணாமலை திராவிடக் கட்சிகளை விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பீர்க்கன்கரணையில் பாஜக பெண் நிர்வாகிகள் 100 பேர் அதிமுக மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுக கட்சியில் இணைந்தனர். செங்கல்பட்டு மாவட்ட துணைத்தலைவி கங்காதேவி சங்கர் இன்று செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். பாஜகவில் பெண்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை தலைமைக்கு கொண்டு சென்றாலும் அண்ணாமலை அதை சரியாகக் கவனிக்காததன் காரணமாகவே பாஜகவில் இருந்து வெளியில் வந்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.