/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/2_224.jpg)
அதிமுகவில் நடப்பது அனைத்திற்கும் பாஜகவே காரணம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதைஎதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார். பழனிசாமிக்குத்தான் இரட்டை இலை என வந்தாலும், அவர் கைகளில் வருவதாலேயே எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் இயக்கம் பலவீனப்பட்டுக்கொண்டு இருக்கிறது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் இணைந்து அதிமுகவை மீட்போம் எனச் சொன்னேன். அதுதான் வரும் காலத்தில் நடக்கும். எம்.ஜி.ஆர் அவருக்கு நடந்த துரோகத்தை தட்டிக்கேட்கத்தான் அதிமுகவை தொடங்கினார். இப்பொழுது துரோகத்தின் மூலம் ஒருவர் பதவியை பிடித்திருப்பதற்கு வரும் காலத்தில் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
ஏற்கனவே அதிமுக, பாஜக கூட்டணியில் தான் உள்ளது. 2024 தேர்தலுக்கு அமமுக கூட்டணி குறித்து முடிவு செய்து கொள்ளலாம். அமமுக பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. எந்த குழப்பமும் இல்லை.
பழனிசாமி வாலியைப் போல் வெற்றி பெற்றுள்ளதாகச் சொல்கிறார்கள். வாலி என்பவர் ராமாயணத்தில் தீயசக்தியாகக் காட்டப்பட்டுள்ளார். அதனால் தான் ராமர் அவரை உயிரிழக்கச் செய்கிறார். அதனால் இன்று வெற்றி பெற்றதாலேயே பழனிசாமி புரட்சித் தலைவர் ஆகிவிட முடியாது. நீதிமன்றத்தீர்ப்பின் மூலம் அடைந்துள்ளார். கட்சியை தன்வசப்படுத்தியுள்ளார். அதிமுக பழனிசாமி எனும் சுயநல மனிதனிடம் சிக்கித் தவிக்கிறது. தொண்டர்களே அதைவிட்டு வெளியேறிவிடுவார்கள். ஜெயலலிதா மறைவிற்குப் பின் அதிமுகவில் ஏற்பட்ட அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் காரணம் மத்தியில் ஆள்பவர்கள் தான். அவர்கள் நினைத்தால் தான் மீண்டும் பழனிசாமி, பன்னீர்செல்வம் இணைய முடியும் எனச் சொன்னேன். அதைத்தான் இன்றும் சொல்கிறேன்” எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)