“பாஜகவை நான் தான் வழிநடத்திக் கொண்டு செல்கிறேன். நான் தான் மெயின் டீம். எனக்கு தான் பாஜக பி டீம்” என சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேவாரம் பாடி செங்கோல் வாங்கினீர்கள்; தமிழில் பேசுகிறீர்கள். நீதிமன்றங்களில் வழக்காடும் உரிமையை தமிழில் பெற்றுத் தருவீர்களா? என் கோவிலில் என் தெய்வத்தின் முன் தமிழில் வழிபடும் உரிமையை பெற்றுத் தருவீர்களா? நீங்கள் பாடிய தேவாரத்தை பெருவுடையார் கோவிலில் பாட அனுமதிப்பீர்களா? சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ் பாட மொழியாகுமா? கேந்திர வித்யாலயா, நவோதயா என மத்திய அரசு பள்ளிகளில் தமிழ் மொழி பயிற்றுவிக்கப்படுமா? எதையாவது பேசிக்கொண்டு இருப்பது எல்லாம் நாடகம் தான்.
நான் திருவள்ளுவரை பேசினால் அவர்களும் பேசுவார்கள். நான் ராஜ ராஜ சோழனை பேசினால் அவர்களும் பேசுவார்கள். நான் வேலு நாச்சியாரை பேசினால் அவர்களும் பேசுவார்கள். பாஜகவை நான் தான் வழிநடத்திக் கொண்டு செல்கிறேன். நான் தான் மெயின் டீம். எனக்கு தான் பாஜக பி டீம்.
வரி, வளம், வாக்கு இதற்காக நம்மை சேர்த்து வைத்துள்ளார்கள். தனிநாட்டை யார் வைத்திருந்தால் என்ன. சில நாட்களில் வளங்களை எல்லாம் சுரண்டி எடுத்த பின் சீமான் தனிநாடு கேட்டால் வைத்துக்கொள்ளுங்கள் எனச் சொல்லிவிடுவார்கள். சுடுகாட்டை யார் வைத்திருந்தால் என்ன. என் வளத்திற்காகவும் வாக்கிற்காகவும் என் வரிக்காகவும் நம்மை சேர்த்து வைத்துள்ளார்கள்” என்றார்.