Skip to main content

"உங்க வாய்தான் காதுவரை கிழியுது"... சுப வீரபாண்டியனை கடுமையாக விமர்சித்த பாஜகவின் எஸ்.வி.சேகர்!

Published on 14/03/2020 | Edited on 14/03/2020

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்தாண்டு செப்டம்பர் 1- ஆம் தேதியில் இருந்து பாஜக தலைவர் பதவி காலியாக இருந்த நிலையில், எல்.முருகனை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக பதவி வகித்து வரும் எல்.முருகன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சுமார் 15 வருடம் வழக்கறிஞர் பணியில் அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த எல்.முருகன், என் மீது நம்பிக்கை வைத்து பதவி தந்துள்ளார்கள்; அதற்கேற்றவாறு செயல்படுவேன் என்றார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு நன்றி தெரிவித்தார். 
 

bjp

 


இந்த நிலையில் பாஜகவின் தமிழக தலைவர் நியமனம் குறித்து 'திராவிட இயக்கத் தமிழர் பேரவை'யின் தலைவர் சுப வீரபாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில். "நம்மவர்கள் கோயில் அர்ச்சகர்களாகக் கூட ஆகி விட்டனர். ஆனால் பாஜக வில்,  ஹெச்.ராஜா, எஸ்வி சேகர் உள்ளிட்ட பார்ப்பனர்கள் எவரும் மாநிலத் தலைவர்களாகக் கூட ஆக முடியவில்லையே, ஏன்? ஏனெனில் இது பெரியார் மண் " என்று குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து சுப வீரபாண்டியனின் இந்த கருத்துக்கு நடிகரும், அரசியல்வாதியுமான பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் கூறியுள்ளார். அதில், " ஆனா உங்க வாய்தான் காதுவரை கிழியுது.  செயல்ல ஒரு தலித்தைகூட தலைவராக்ககூடிய நல்ல புத்தியில்லா சாதி வெறி பிடித்து அலையும் நீங்கள் பாஜக வைப்பற்றி பேச அருகதை இல்லாத ஓசி பிரியாணிகள் " என்று சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கூறியுள்ளார். பாஜகவின் எஸ்.வி.சேகர் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் திராவிட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்