Skip to main content

“ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை பாஜக இழந்துவிட்டது” - மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்  

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

 "BJP has withdrawn the right to pronounce the word democracy" - M. K. Stalin's strong condemnation

 

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள்’ என்ற வகையில் பேசியிருந்ததாகக் கூறி பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத்  தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துகொள்ள அவருக்கு உடனடியாக பிணை வழங்கியும் உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

 

தொடர்ந்து மக்களவை இணைச் செயலாளர் திரிபாதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சூரத் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வழங்கிய தீர்ப்பின்படி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் 102(1)(e) விதிகளின்படி, அவர் தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து அதாவது மார்ச் 23, 2023 முதல் லோக்சபா உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

 

 "BJP has withdrawn the right to pronounce the word democracy" - M. K. Stalin's strong condemnation

 

ராகுல் காந்தி மீதான தகுதி நீக்க நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ராகுல் காந்தியின் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ''ராகுல் காந்தி மீது நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து இதனை எதிர்க்க வேண்டும். பதில் சொல்லாமல் கேள்வி கேட்பவரை அப்புறப்படுத்துவது ஒன்றிய அரசுக்கு அழகல்ல. இந்த தகுதி நீக்க நடவடிக்கைகள் மூலமாக ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை பாஜக இழுந்து விட்டது. ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் ஜனநாயக உரிமையை பறிப்பதாகும். தகுதி நீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார்.