கடந்த 24 ஆம் தேதி திருப்பூரில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கலந்து கொண்டு பேசியபொழுது,''குடும்ப ஆட்சிக்கு, அரசியலுக்கு எதிரான கட்சி பாஜக மட்டுமே. திமுக கட்சி தமிழக மக்களின் கலாச்சாரம், பண்டிகையை மாற்ற முயல்கிறது. குடும்ப அரசியலால் ஜனநாயகத்திற்குப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், கலாச்சார வளர்ச்சிக்கும் பாஜக என்றுமே துணைநிற்கும்'' எனப் பேசியிருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஹெச்.ராஜா, குஷ்பு ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் திறந்து வைக்கப்பட்ட கல்வெட்டில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனின் பெயருக்குக் கீழ் தமிழக எதிர்க்கட்சி தலைவர் என்று பொறிக்கப்பட்டிருந்தது. இது அதிமுக வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களைச் சந்திக்கையில், அவரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ''பாஜக வளர்கிற கட்சி. அவர்கள் அவங்க கட்சியை வளர்ப்பதற்காகச் சொல்வார்கள். தமிழகத்தில் உண்மையாக எதிர்க்கட்சியாக இருக்கின்றது அதிமுக மட்டுமே; ஆளுங்கட்சி வாய்ப்பினை தவறவிட்டுள்ளது என்று மக்கள் மத்தியில் அனுதாபத்தைப் பெற்றுள்ள ஒரே கட்சியாகவும் அதிமுக மட்டுமே உள்ளது'' என்றார்.