பாராளுமன்றத் தேர்தல் நெருக்கி வருவதால் அதிமுகவில் விருப்ப மனு பெறுவது நேற்று தொடங்கியது. முதல் நாளே பல பிரபலங்கள் விருப்ப மனுக்களை வாங்கிச் சென்றனர். இதற்கிடையே அதிமுக தலைமையில் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையும் தீவிரமாக நடக்கிறது. இதில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பதாகவும், அதிக தொகுதிகளை பாஜக கேட்பதால் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கன்னியாகுமரி, நெல்லை, கோவை, திருப்பூர், தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளை கேட்டு பாஜக பேரம் பேசி வருகிறது. மேலும் இடைத்தேர்தல் நடக்க உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளில் 2 தொகுதிகளை பாஜக கேட்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அதிமுக ஆதரவுடன் வெற்றி பெற்று சட்டசபையிலும் நுழைய பாஜக ஆர்வம் காட்டுவதால், பாஜக கேட்கும் தொகுதிகள் குறித்து விவாதித்து முடிவு எடுப்பதற்காக வரும் 8ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தக் கூட்டத்தில் பாஜகவின் முடிவை எதிர்க்கும் மாவட்டச் செயலாளர்களை சமாளிக்க எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் முடிவு செய்துள்ளார்களாம்.