BJP and ADMK must be defeated together says CM MK Stalin speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “வணக்கம். நல்லாயிருக்கீங்களா? ஏப்ரல் 19ஆம் தேதி நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் நாள். நாட்டோட எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது. உங்கள் வாக்கு உங்கள் தொகுதி எம்.பி.யை மட்டும் தேர்வு செய்வதற்கான வாக்கு இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக நம் நாட்டை நாசப்படுத்திய பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாக்கு. இனி இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது. அரசியல் சட்டத்தை காப்பாற்ற நடக்கிற தேர்தல். மதம், ஜாதி கடந்து மக்கள் ஒற்றுமையாக வாழ உங்கள் வாக்குதான் வலிமையான ஆயுதம். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் என்னென்ன திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறேன் என்பது உங்களுக்கே தெரியும்.

மாதாமாதம் மகளிருக்கு ரூ. 1000 வழங்கக் கூடிய கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்ய விடியல் பயணம் திட்டம், பள்ளி குழந்தைகள் காலையில் பசியில்லாமல் படிக்க முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு ரூ. 1000 வழங்கக் கூடிய புதுமைப் பெண் திட்டம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தர நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி என ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

Advertisment

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உற்றதுணையாக இருக்கிறோம். உங்கள் திராவிட மாடல் அரசின்சாதனைகள் இந்தியா முழுவதும் எதிரொலிக்க, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள். தமிழகத்தை வஞ்சித்த பாஜகவையும் தமிழ்நாட்டை பாழ்படுத்திய அதிமுகவையும் ஒரு சேர வீழ்த்த வேண்டும். தமிழ்நாட்டிற்கு சிறப்பு திட்டங்கள் கிடைக்க தமிழையும் தமிழரையும் உண்மையாக நேசிக்கிற ஒன்றிய ஆட்சி டெல்லியில் அமைய திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.