Skip to main content

ராகுலின் யாத்திரை நாளையுடன் முடிவு; 21 கட்சிகளுக்கு அழைப்பு

 

bharath jodo yatra End tomorrow;

 

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் நாளையுடன் முடிவடைகிறது.

 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்தியா முழுவதும் 13 மாநிலங்களில் 3,970 கிலோமீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாடி வருகிறார். தமிழ்நாட்டின் குமரியில் துவங்கிய இந்த யாத்திரையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை அசைத்து தொடங்கி வைத்தார். இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குமரி முதல் காஷ்மீர் வரை இந்தப் பயணத்தை 150 நாட்களுக்கு மேற்கொண்டு வருகிறார். 

 

ராகுல் காந்தியின் இந்த நடைப்பயணத்தில் அவருக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பல மாநிலங்களில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கு கொண்டனர். முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் இந்த யாத்திரையில் கலந்துகொண்டனர். தமிழகத்திலிருந்து எம்.பி. கனிமொழி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்துகொண்டனர். 

 

இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் நாளையுடன் நிறைவடைகிறது. ஸ்ரீநகரில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து தனது பயணத்தை நிறைவு செய்கிறார். நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள 21 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் மலிகார்ஜுன கார்கே கூறுகையில், “நாளை ஸ்ரீநகரில் நடைபெறும் விழாவில் பாத யாத்திரையில் பெரும் கூட்டம் சேரும் என்று எதிர்பார்க்கிறோம். நிறைவு விழாவின் போது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் கலந்துகொள்கிறார்கள்” எனக் கூறினார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !