Skip to main content

பகுஜன் சமாஜ் கட்சிக்கு புதிய மாநில தலைவர் நியமனம்!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
Bahujan Samaj Party appoints new state president

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் என்பவர் ஜூலை 14ஆம் தேதி அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மீதமுள்ள 10 பேர் பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அதே சமயம் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

Bahujan Samaj Party appoints new state president
பி. ஆனந்தன்

இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டவர் ஆவார். மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர்களான அசோக்சித்தார்த், கோபிநாத்  சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதியின் விரிவான பரிசீலனை மற்றும் ஆலோசனையின் முடிவில் கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர்கள் அசோக்சித்தார்த்  மற்றும் கோபிநாத் தலைமையில் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராகப் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நியமிக்கப்படுகிறார்.

Bahujan Samaj Party appoints new state president

மாநில தலைவராக  பி.ஆனந்தனும், மாநில துணை தலைவராக  டி.இளமான் சேகர் மற்றும் மாநில பொருளாளராக கமலவேல் செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் மீதமுள்ள தமிழ்நாடு மாநில கமிட்டி நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்