
அரசு சேவை இல்லத்தில் தங்கி இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் சானிடோரியம் அருகே அரசு மகளிர் சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் தங்கி புறநகர்ப் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருகின்றனர்.
மிகவும் பாதுகாப்பான பகுதியாக இந்த அரசு சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த 13 வயது சிறுமி அரசு சேவை இல்லத்தில் தங்கி குரோம்பேட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு சேர்வதற்கு வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் காலையில் தூங்கி எழுந்த சிறுமி அரசு சேவை இல்லத்தில் இருந்து வெளியில் வந்த போது மர்ம நபர் ஒருவர் முகத்தை துணியால் மறைத்தபடி சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதில் மாணவி பலமாக தாக்கப்பட்டார். மாணவியின் கூச்சல் சத்தம் கேட்டு அவர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். மற்ற மாணவிகள் அனைவரும் சேர்ந்து மாணவியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மாணவிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் அரசு சேவை இல்லத்தின் காவலாளி மேத்யூ என்பவர் உள்ளே புகுந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. சிறுமி சேவை இல்லத்திற்கு புதியவர் என்பதால் வெளியே சொல்லமாட்டார் என முகத்தை மூடிக்கொண்டு பாலியல் கொடுமை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார். கைது செய்யப்பட்ட காவலாளி மேத்யூவின் தாய் அதே சேவை மையத்தில் வேலை செய்துவந்த நிலையில் உயிரிழந்த நிலையில் கருணை அடிப்படையில் காவலாளி பணிக்கு நியமிக்கப்பட்ட மேத்யூ இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டித்துள்ளார். இதுகுறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, விடுதியின் காவலாளி கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
அரசு சேவை இல்லத்திலேயே ஒரு 8-ம் வகுப்பு மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது இந்த திமுக அரசு முற்றிலும் செயலிழந்து நிற்பதையே உணர்த்துகிறது. பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
அரசு சேவை இல்லத்தில் உள்ள சிறுமிகளைக் காக்க வேண்டிய காவலாளியே இப்படி ஒரு கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது, குற்றம் செய்பவர்களுக்கு இந்த ஆட்சி எடுக்கும் நடவடிக்கைகள் மீது துளி கூட பயம் இல்லை என்ற குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையிலேயே உள்ளது. இந்த காவலாளியால் மற்ற சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனரா? என்பதை காவல்துறையினர் தீர விசாரிக்க வேண்டும்.
தமிழ்நாடு டெல்லிக்கு Out Of Control-ஆக இருப்பதாக யாரோ எழுதிக் கொடுத்த டயலாக்கைப் பேசும் பொம்மை முதல்வர் அவர்களே- உங்கள் ஆட்சியில் Out Of Control ஆக இருக்கும் பாலியல் "SIR"-களை எப்போது Control செய்யப் போகிறீர்கள்? காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.