நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22ஆம் தேதி முதல் இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. மத்திய நிதியமைச்சர் மக்களவையில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பெரம்பலூர் தொகுதி திமுக உறுப்பினர் அருண் நேரு தனது முதலாவது கன்னிப் பேச்சை பேசினார்.
அவர் பேசியதாவது, “இந்தியா என்பது மாநிலங்களின் யூனியன். ஆனால், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் நிதி மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று மக்களைப் பாதிக்கக் கூடிய பல முக்கிய பிரச்னைகள் பதிவு செய்யும்போது, ஆளும் கட்சி சார்பில் அவையில் மூத்த உறுப்பினர்கள் இங்கே இருப்பதில்லை. மாநில அரசுகள் அதன் வளர்ச்சித் திட்டங்களுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு போதிய வளங்களைத் தருவதில்லை.
மத்திய நிதியமைச்சர் வேலை வாய்ப்பு குறித்தும் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது எனக் கூறினார். ஆனால், இந்த நாட்டில் பெரும்பான்மை இளைஞர்கள் முறைப்படுத்தப்பட்ட துறைகளில் பணியாற்றுவதில்லை. இந்த பட்ஜெட்டில் அசல் மனித ஆற்றலின் தேவை குறித்து சரியாகப் பேசப்படவில்லை. தொழிலாளர் வைப்பு நிதி செலுத்தும் முறையான நிறுவனங்களைப் பார்க்கும்போது அதில் உள்ள ஐந்து சதவீதத்துக்கும் குறைவான மனித ஆற்றலை பற்றியே பட்ஜெட்டில் பேசப்பட்டுள்ளதை அறியலாம். எனவே, உண்மையாக பயிற்சியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு நிதியமைச்சரின் பேச்சு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இதனால், முறைப்படுத்தப்படாத பொருளாதாரத்தில் தொடர்புடையவர்களையும் கவனத்தில் கொண்டு பட்ஜெட்டில் சில அம்சங்களை சேர்க்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயத்துக்கு தேவையான உரம், மக்களுக்குத் தேவையான உணவு, இளைஞர்களுக்குத் தேவையான கல்வி மிக முக்கியமானவை. முந்தைய பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது, உரத்துக்கு 13.5 சதவீதம், உணவுக்கு 3.1 சதவீதம், கல்விக்கு 2.1 சதவீதம் நிதி குறைக்கப்பட்டுள்ளது. இப்படி இருந்தால் ஒரு நாடு எப்படி வளர்ச்சிப்பாதையில் செல்லும்.
நீட் தேர்வு குறித்து மத்திய அரசு விளக்கும்போதெல்லாம் அதன் வெளிப்படைத்தன்மை, சமத்துவம் ஆகியவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. இந்த நடைமுறை சிறப்பானதாக இருக்கலாம் என மத்திய அரசு கருதலாம். ஆனால், அதில் குறைபாடுகள் உள்ளன. இந்த அரசின் தவறான கொள்கையால் எனது தொகுதிக்குள்பட்ட பகுதியில் வசித்து வந்த மாணவி அனிதா உயிரிழந்தார். இந்த தேர்வு நடைமுறை எதை தரும் என்பது தேவையில்லை. அதன் முடிவுகள் என்னவாகின்றன என்பதே முக்கியம். நீட் நடைமுறை என்ற பெயரில் சமமற்ற போக்கு திணிக்கப்படுகிறது. எனவே, நிலைமை கையை மீறிச்செல்லும் முன்பாக, இதில் தொடர்புடைய ஒவ்வொருக்கும் தனிப்பட்ட முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துங்கள்” எனப் பேசினார்.