சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று (09.03.2021) காலை 11 மணிக்கு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு, அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த முடிவால் வரும் தேர்தலில் தேமுதிக தனித்து நிற்குமா? அல்லது வேறு யாருடனேனும் கூட்டணி அமைக்குமா என்பது நாளை தெரியவரும் எனக் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்திற்குப் பின் வெளியே வந்த தேமுதிக கட்சி துணைப்பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், ''கேட்ட தொகுதிகளும், எண்ணிக்கையும் தராததால் நாங்கள் அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறோம். தேமுதிகவிற்கு இன்றுதான் தீபாவளி. கண்டிப்பாக இந்தத் தேர்தலில் அதிமுக தமிழகத்தில் டெபாசிட் இழப்பார்கள். முக்கியமாக அங்கு இருக்கின்ற கே.பி.முனுசாமி, பாட்டாளி மக்கள் கட்சியுடைய ஸ்லீப்பிங் செல். அவர் அதிமுகவிற்கு செயல்படவில்லை'' என்றார்.
அதேபோல் கடலூர் பண்ட்ருட்டியில் கட்சிக் கூட்டத்தில் தேமுதிக விஜய பிரபாகரன் பேசுகையில், ''இதுவரை சாணக்கியனாக இருந்தது போதும். இனி தேமுதிக சத்ரியனாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எடப்பாடி தொகுதியில் அதிமுக மண்ணைக் கவ்வும். சட்டப்பேரவை தொகுதியில் அதிமுகவுக்குத் தக்க பதிலடி கொடுப்போம். எனக்கு ஆணவம் இல்லை. ஆனால் உங்கள் ஆணவத்தைத்தான் மக்கள் அடக்கப் போகிறார்கள். நிறைய நடந்துள்ளது, சொன்னால் கலவரம் ஆகிவிடும். உங்களைப் போன்று காசுக்கு மாரடிக்கும் கூட்டம் நாங்கள் இல்லை. நாங்கள் கேட்கிற சீட் கிடைக்கவில்லை என்றால் ஒவ்வொரு தொகுதியிலும் சீட் பறிக்கப்படும். அதிமுகவிற்கு இனி இறங்குமுகம்தான். அதிமுக தலைமைதான் சரியில்லை. இதுவரைக்கும் விஜயகாந்தை பாத்துருப்பீங்க, பிரேமலதாவ பாத்துருப்பீங்க. இனி அவங்க ரெண்டு பேரையும் கலந்து விஜயபிரபாகரன பார்ப்பீர்கள்'' என்றார்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ''அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது துரதிர்ஷ்டவசமானது. தேமுதிகவின் பலம் கடந்த தேர்தலிலேயே தெரிந்துவிட்டது. பிடிக்கவில்லை என்பதற்காக அதிமுக மீது சேற்றை வாரி இறைக்கக்கூடாது. கீழ்த்தரமான அரசியலை முன்னெடுத்தால் அதிமுக பதிலடி கொடுக்கும். தேமுதிக விலகுவதால் அதிமுக கூட்டணிக்குப் பாதிப்பு இல்லை. அவர்களுக்குத்தான் பாதிப்பு. எடப்பாடி மற்றுமின்றி 234 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும். பலத்திற்கு ஏற்றவாறுதான் பாஜக, பாமகவுக்கு சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது'' என்றார்.