முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியிருக்கிறார். அண்ணாமலையின் இந்த கடிதம் குறித்து, பாஜகவின் மூத்த நிர்வாகிகள் செம கடுப்பில் இருக்கிறார்கள்.
இது குறித்து நாம் விசாரித்தபோது, "மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவது குறித்து பாஜக ஒரு திட்டம் வகுத்துள்ளது. அதனைத் தங்களிடம் விவரித்துக் கூற பாஜகவின் துணைத் தலைவர் கரு. நாகராஜன் தலைமையில் ஐவர் குழுவை அமைத்துள்ளேன். அவர்கள் உங்களைச் சந்திக்க இம்மாதத்தில் ஒரு நாள் நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என முதல்வரை சந்திக்க அனுமதி கோரி அண்ணாமலை கடிதம் எழுதியிருக்கிறார். இது எவ்வளவு அபத்தமானது. முதல்வரை அண்ணாமலை சந்திக்க நேரம் கேட்டிருக்க வேண்டும். அதுதான் மரியாதை. அவர் இல்லையெனில், மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் குழு சந்திக்க நேரம் கேட்டிருக்க வேண்டும். அப்படி கேட்டிருந்தால் அது பாஜகவுக்கு மரியாதையாக இருந்திருக்கும்.
இதை விட்டுவிட்டு, ஒரு முதல்வரை சந்திக்க ஒரு துணைத் தலைவரை அனுப்பி வைக்கிறேன் என்றா கேட்பது? அப்படி கேட்பது கேலிக் கூத்தாக இல்லையா? இது முதல்வரை அவமதிப்பதுடன் பாஜகவின் மரியாதையையும் கெடுப்பதாக இருக்கிறது" என்று குமுறுகிறார்கள். அண்ணாமலையின் இந்தக் கடித அணுகுமுறையை பாஜகவினர் மட்டுமல்ல, அரசியல் விமர்சகர்களும் ரசிக்கவில்லை. இதற்கிடையே, முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டு வைக்கப்பட்ட கோரிக்கையின் வழிமுறைகள் ஆரோக்கியமாக இல்லை என்பதால், அண்ணாமலையின் கடித கோரிக்கைக்கு முதல்வர் செவிசாய்க்க மாட்டார். நேரமும் ஒதுக்கமாட்டார். மாறாக, டாஸ்மாக் அமைச்சர் முத்துசாமியை அல்லது உள்துறை செயலாளரையோ சந்தித்து கோரிக்கையை கொடுத்துவிட்டுப் போங்கள் என ஒரு 10 நிமிடம் ஒதுக்கப்படலாம் என்கிறது அதிகாரிகள் தரப்பு.