ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அத்தொகுதியை ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக அறிவித்து திமுக கூட்டணிக் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது. அதே சமயம் அதிமுகவின் ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து செந்தில் முருகனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இபிஎஸ் - ஓபிஎஸ் என இருவரையும் தனித்தனியே சந்தித்து ஈரோடு இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய சி.டி. ரவி, “தமிழகத்தில் பண பலம் விளையாடும் என்பதை அறிவோம். இடைத்தேர்தலில் திமுகவை வீழ்த்த ஒன்றுபட்ட அதிமுக அவசியம். ஜே.பி. நட்டா கூறியதை முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் தெரிவித்தேன். இருவரும் இணைந்து பணியாற்ற பாஜக சார்பில் வலியுறுத்தினோம். இபிஎஸ் ஓபிஎஸ் இணைந்து செயல்பட்டால் தான் திமுகவை வீழ்த்த முடியும் என்று வலியுறுத்தினோம்” எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “ஈரோடு கிழக்கு தேர்தலை பொறுத்தவரை திமுக ஆட்சி மக்களிடம் மிகப்பெரிய கெட்ட பெயரை வாங்கியுள்ளது. பிரச்சனைகளை அவர்களாகவே உருவாக்கி தமிழக கலாச்சாரத்தைப் பற்றி திமுக அமைச்சர்கள் எம்பிக்கள் பேசி வருகிறார்கள். தமிழக மக்கள் திமுக ஆட்சிக்கு எதிராக இருக்கிறார்கள் என சி.டி. ரவி சொன்னார். இந்த நேரத்தில் தமிழகத்திற்கு தேவை உறுதியான தேசிய ஜனநாயக கூட்டணி. அதனால் தான் சி.டி.ரவி இன்று இபிஎஸ் ஓபிஎஸ் இருவரையும் சந்தித்து ஜே.பி.நட்டா கூறியதை தெரிவித்துவிட்டு வந்துள்ளார். திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் உறுதியான நிலையான வேட்பாளர் வேண்டும் என தெரிவித்துவிட்டு வந்துள்ளார். இதுவே பாஜகவின் கருத்து.
கடைசி நாளான வேட்புமனு தாக்கல் பிப்.7 ஆம் தேதி வரை உள்ளது. பாஜகவின் நிலைப்பாடு எதிரணியாக தனித் தனியாக நிற்காமல் ஒரே அணியாக ஒரே வேட்பாளர் நிறுத்தப்பட்டு திமுகவிற்கு எதிராக வெற்றி பெற வேண்டும்” எனக் கூறினார்.