சென்னையைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு பெரியார் நகர் புறநகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு உணர்விழப்புக் காரணமாக நவ. 8-ம் தேதி சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாததால் அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருடைய வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.
அதனையடுத்து பிரியாவின் வலது கால் அகற்றப்பட்டது. கால் அகற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த பிரியா உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக நேற்று முன்தினம் (15.11.2022) காலை 7.15 மணிக்கு உயிரிழந்தார்.
மாணவியின் உயிரிழப்புக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு நிதி உதவியையும் வழங்கினார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீராங்கனையின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு செய்தியாளர்களைச் சந்திக்கையில், ''சகோதரி பிரியாவின் நிலைமை என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு. இப்பொழுதுதான் அவருக்குப் பிறந்தநாள் முடிந்திருக்கிறது. ஒரு பெரும் கனவைச் சுமந்துகொண்டு கால்பந்தாட்ட வீரராக இருந்த அவருக்குக் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாகக் காலை அகற்ற வேண்டிய கட்டாயம் வந்து, அதன் காரணமாக அவர் இறந்திருப்பது நம்முடைய மாநிலத்தில் இதுபோன்ற ஒன்றைப் பார்த்தது கிடையாது.
குறிப்பாக மருத்துவ கட்டமைப்பு என்பது இந்தியாவிலே மிக ஆழமாக, மிக நன்றாக இருக்கக்கூடிய மாநிலம் நம்முடைய தமிழ்நாடு. சம்பந்தப்பட்ட மருத்துவமனை முதல்வரின் தொகுதியில் இருப்பது வேதனையாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. அரசு என்னதான் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னாலும் இன்று பல அரசு மருத்துவமனைகள் இந்த நிலையில்தான் இருக்கிறது. வீராங்கனை பிரியாவின் இறப்பு மீடியாக்கள் மூலமாக வெளியே வந்திருக்கிறது. இதைத் தமிழகம் முழுவதும் பேசுகிறோம். ஆனால் இதேபோல் எத்தனை எத்தனையோ அரசு மருத்துவமனைகளில் நிர்வாகக் கோளாறு காரணமாக ஏற்படும் பல இறப்புக்கள் வெளியே வருவதில்லை. இதனை எல்லாம் உடனடியாக அரசு இரும்புக்கரம் கொண்டு எப்படி தமிழகத்தில் மருத்துவத்துறைக்கு ஒரு பெரிய பெயர் இருந்ததோ, அதை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.
பிரியா தந்தை சொன்னார், பிரியாவுக்கு பிரதமர் மோடியைப் பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது. “அப்பா நான் பெரிய கால்பந்தாட்ட வீராங்கனையாக மாறிய பிறகு என்னை மோடியிடம் கூட்டிக்கொண்டு போங்க. நான் என்னுடைய பதக்கங்களை அவரிடம் காட்ட வேண்டும், அவரிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்” என்று உள்ளே சொன்னார்கள். இன்று ஒரு தந்தையாக என்னால் இதை நிறைவேற்ற முடியவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார். இன்னும் ஐந்து நாட்களில் பாஜக நிர்வாகிகள் உங்கள் வீட்டுக்கு மீண்டும் வருவோம். இந்திய அணியின் கால்பந்தாட்ட கேப்டன் ராமன் விஜயன் அவர்கள் தலைமையில் பாஜக நிர்வாகிகள் இங்கே வந்து இரண்டு விஷயங்களை இன்னும் ஐந்து நாட்களில் செய்வதாக உறுதி அளித்திருக்கிறோம். பிரியாவின் பெயர் சென்னை மாநகரத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக பாஜக இந்த மழைக்காலம் முடிந்தவுடன் பிரியா பெயரில் சென்னை முழுவதும் ஒரு கால்பந்தாட்ட போட்டியை மிகப்பெரிய அளவில் நடத்திக் காட்டப் போகிறோம். அதேபோல் பிரியாவின் சகோதரர்கள் மூன்று பேர் கால்பந்தாட்டம் விளையாடுகிறார்கள். அவர்கள் கை காட்டுகின்ற பத்து மாணவிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குக் கால்பந்தாட்ட பயிற்சி வழங்குவதற்கான முழுச் செலவையும் பாஜக ஏற்கும்'' என்றார்.