Skip to main content

அண்ணாமலை உருவப் படம் எரிப்பு! அதிமுகவினர் கைது! 

Published on 09/03/2023 | Edited on 09/03/2023

 

Annamalai ADMK Issue in Ariyalur

 

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கண்டித்து அதிமுகவினர் உருவ பொம்மையை எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

கடந்த சில நாட்களாக அதிமுக - பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே பரபரப்பான கருத்து மோதல் நடைபெற்று வருகின்றது. இதில் அண்ணாமலை, ‘நான் ஜெயலலிதா போன்றவர் எதற்கும் பயப்பட மாட்டேன். ஜெயலலிதா போல் துணிந்து நடவடிக்கை எடுப்பேன்’ என்று ஜெயலலிதாவுடன் தன்னை ஒப்பிட்டு பேசினார். இது அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

அதிமுக தொண்டர்கள், ஜெயலலிதாவுடன் அண்ணாமலை தன்னை ஒப்பிட்டு பேசுவது பிதற்றல் பேச்சு. ஒப்பிட்டு பேசுவதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறுவதோடு அண்ணாமலை பேசியதை வன்மையாக கண்டித்து வருகிறார்கள். அதன் எதிரொலியாக அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி கடை வீதியில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராஜா ரவி தலைமையில் அதிமுகவினர் அண்ணாமலை உருவப் படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது” - வைகோ

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
"BJP's election ,manifesto will not be taken in Tamil Nadu says Vaiko

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் சென்று கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி இருவரும் ஆறுதல் கூறினர்.

பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் எனப் பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து, புதிதாக (டெஸ்ட்)சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது.

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபாடாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்தபோது எட்டிக் கூட பார்க்காத பிரதமர்  எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் எனத் தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க மாநில தலைவர்  வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரச்சாரம் செய்து வருகிறார்‌. இதற்கு தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Next Story

“வளர்ச்சித் திட்டங்கள் கிடைத்திட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்” - எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 Vote for admk to get development plans Edappadi Palaniswami campaign

திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “மத்தியில் இருந்து வரக்கூடிய நமக்கு தேவையான திட்டங்களை பெறுவதற்கு, தமிழ்நாட்டுக்கு தேவையான வளர்ச்சி கிடைக்க, தமிழ்நாட்டுக்கு தேவையான நிதி கிடைக்க, சுதந்திரமாக நாடாளுமன்றத்தில் பேசி மக்களுடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். அதிமுக யாரையும் நம்பாமல் சொந்த காலில் நிற்கிறோம். மத்தியில் திமுக அரசு 17 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து இதுவரை தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை.

தமிழகம் புயலால் பாதிக்கப்பட்டு அதிமுக ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு தேவையான அத்தனை அடிப்படை வசதிகளையும் உடனுக்குடன் செய்து காப்பாற்றியது. ஆனால் தற்போது ஏற்பட்ட சிறிய புயலுக்கே திமுக அரசு மத்திய அரசிடம் இருந்து நிதியை பெறவில்லை. நிதியை முறையாக கேட்டு பெறுவது மாநில அரசின் கடமையாகும். ஒவ்வொரு முறையும் மத்திய அரசை குறை கூறிக்கொண்டு மாநில அரசு முறையாக ஆட்சி செய்யவில்லை.

இந்த ஆட்சியை தமிழகத்திலிருந்து அகற்ற வெகு நாட்கள் இல்லை. அதிமுக விரைவில் ஆட்சியை அமைக்கும். திமுக அரசை ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள துறையூர் நகருக்கு அதிமுக அரசு ஆட்சியில் இருந்த போது தான் துறையூரில் இருந்து பெரம்பலூருக்கு செல்ல புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. அதேபோன்று காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டது.  இதேபோன்று எண்ணற்ற நலத்திட்டங்கள் முசிறி, மண்ணச்சநல்லூர் சமயபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது .

எனவே உங்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க அதிமுக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற வேண்டும். எனவே அதிமுக வேட்பாளர் சந்திரமோகனுக்கு நமது வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனப் பேசினார்.

கூட்டத்தில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி மற்றும் அதிமுக கூட்டணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.