கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இட ஒதுக்கீட்டை பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு ரத்து செய்திருந்தது. மேலும் அவர்களை 10 சதவீத இட ஒதுக்கீட்டு பிரிவுக்கு மாற்றியது. அதாவது, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு பதிலாக அவர்கள் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவு (இ.டபிள்யூ.எஸ்.) இட ஒதுக்கீட்டிற்கு மாற்றப்பட்டுள்ளனர். அதில் 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கிறது. மேலும் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இட ஒதுக்கீடு இனி ஒக்கலிகர்கள் மற்றும் லிங்காயத் சமூகத்தினருக்கும் கூடுதலாக தலா 2 சதவீதம் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் பசவராஜ் பொம்மை அரசு அறிவித்திருந்தது. இதற்கு கர்நாடகா மாநிலத்தில் பெரும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், நாளையுடன் அங்கு தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இதனால், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தீவிரமாக தங்கள் இறுதிக்கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.
அந்தவகையில், கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டம், சிக்கொடி பகுதியில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது; “பாஜக 4% முஸ்லிம் இட ஒதுக்கீட்டை நீக்கியது மற்றும் லிங்காயத்துகள் மற்றும் எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீட்டை அதிகரித்தது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு 6 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வருவோம் என்று அக்கட்சி கூறுகிறது. இது லிங்காயத்துகள் மற்றும் எஸ்.சி இட ஒதுக்கீட்டை குறைக்கும். கர்நாடகா இதை விரும்பவில்லை. மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்”என்று பேசினார்.