மக்களவை துணை சபாநாயகரும், கரூர் நாடாளுமன்ற எம்.பி.யுமான தம்பிதுரை கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ''18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் வராது. இந்த ஆட்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி. ஐந்து ஆண்டுகளை முழுமையாக பூர்த்தி செய்யும்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா, கனிமொழியை விடுதலை செய்தபோது சி.பி.ஐ. எங்களுக்கு உரிய ஆதாரங்கள் தரவில்லை, அதனால்தான் விடுதலை செய்தோம் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். ஆனால் அவர்கள் குற்றம் செய்யவில்லை என்று கூறவில்லை.
இதன் மூலம் சி.பி.ஐ. அவர்களுக்கு எவ்வளவு ஆதரவாக இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. தி.மு.க.வினர் பா.ஜ.க.வுக்கு அழுத்தம் கொடுத்து தமிழக முதல்வர், அமைச்சர்கள் மீது சி.பி.ஐ.யை ஏவி விடுகிறார்கள்.
மாநில அரசின் அதிகாரங்களை படிப்படியாக மத்திய அரசு எடுத்துக்கொண்டு வருகிறது. ஜி.எஸ்.டி., நீட் தேர்வு ஆகியவற்றை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், நாங்களும் எதிர்த்தோம். ஆனால் அதனை அமல்படுத்தி விட்டார்கள். சர்க்கசில் சிங்கம், புலிகளை கட்டுப்படுத்தும் ரிங் மாஸ்டர் போன்று அ.தி.மு.க.வை பிரதமர் நரேந்திரமோடி கட்டுப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி உள்ளனர்.
எங்களுக்கு மோடி ரிங் மாஸ்டர் என்றால் தி.மு.க.வுக்கு அமித்ஷா ரிங் மாஸ்டராக இருந்துகொண்டு வருகிறார். இதுதான் உண்மை. இதனை காலப்போக்கில் என்னால் நிரூபிக்க முடியும்'' என்றார்.