இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இதனால் ஆட்சி அமைக்கத் தனிப்பெரும்பான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக நாளை (09.06.2024) இரவு 07.15 மணிக்குப் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார் எனக் குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதன் மூலம் 3 ஆவது முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவானது டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் 16 எம்.பி.க்கள் கொண்ட சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 4 மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ராமமோகன் நாயுடு, சந்திர சேகர் உள்ளிட்ட 4 எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த 4 அமைச்சர் பதவிகளும் கேபினட் அந்தஸ்து உள்ள பதவி என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் 12 ஆம் தேதி ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.