தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்பொழுது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்துக்குள்ளான நிலையில், ஹெலிகாப்டரில் சென்ற 14 பேரில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். " எப்போது முப்படை தளபதி இங்கே வந்தாலும் மொத்த நீலகிரியைப் பாதுகாப்பு வளையத்தில் வைத்திருப்போம். எங்கேயும் யாரும் வர முடியாது. இதில் எந்த சந்தேகமும் கிடையாது'' என 10.12.2021 அன்று குன்னூரில் செய்தியாளர்களைச் சந்தித்திருந்த தமிழ்நாடு டிஜிபி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் சூலூர் சென்றபொழுது சாதாரண மக்களில் இருந்து கட்சி நண்பர்கள் வரை சாலையில் வந்து அவர்களுக்கு பிரியா விடை கொடுத்தார்கள். அதை எப்பொழுதும் யாராலும் மறுக்க முடியாது. ஆனால் இதை அரசியல் ஆக்குவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. தமிழகத்தில் எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது அதை விட்டுவிட்டு எதற்கு ஆளுநரை வம்பு சண்டைக்கு இழுக்கிறார்கள். ஏன் இழுக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆளுநர் மாளிகையில் வேலை செய்யாமல் ஆளுநர் இருக்கிறார் என்றால் குற்றம் சுமத்தலாம். அரசு விழாவில், அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அங்கு முப்படை தளபதிக்கு அவர் மரியாதை கொடுத்துள்ளார். இதைவிட வேறென்ன வேண்டும்.
சைக்கிளில் போவதற்கும், செல்ஃபி எடுப்பதற்கும், போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே சென்று போட்டோ எடுப்பதற்கும் தான் தமிழகத்தில் டிஜிபி இருக்கிறார். தமிழகத்தில் காவல்துறையை ரன் பண்ணுவது திமுக மாவட்டச் செயலாளர்கள், குறிப்பாக அந்தந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஐடி விங் நிர்வாகிகள் தான் தமிழ்நாட்டு காவல்துறையை, அந்தந்த மாவட்ட எஸ்பிஐ கண்ட்ரோலில் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். டிஜிபி நேர்மையாக இருந்தால் இவ்வளவு பேர் இது தொடர்பாகக் கருத்து போட்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோர் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எதற்கு இந்த பாரபட்சமான நடவடிக்கை. அவர்களை எல்லாம் டிஜிபி கண்ணுக்கு தெரியவில்லையா? 17 மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிறோம் என்று மீண்டும் கூற விரும்பவில்லை. எங்களுடைய பொறுமையைச் சோதிக்க வேண்டாம் எனக் காட்டமாக தெரிவித்தார்.
இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருக்கும் நிலையில் இன்று தமிழக ஆளுநரை பாஜக அண்ணாமலை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.