Skip to main content

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றத்தீர்ப்பு - 16ல் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Published on 13/04/2018 | Edited on 13/04/2018

 

 

dmk


 வன்கொடுமை தடுப்புச் சட்டத்திலிருந்து மீண்டும் தாழ்த்தப்பட்டோர்/மலைவாழ் மக்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கிட வேண்டுமென்பதை வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்கள் விடுத்துள்ள செய்தி: 

 

’’தாழ்த்தப்பட்டோர்/ மலைவாழ் மக்களுக்கு எதிரான குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவான ஒரு நிலையை ஏற்படுத்துவதுடன்;   குற்றம் செய்ய நினைப்பவர்களுக்குச் சாதகமான வகையில் அமைந்துள்ளது.

 

நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் நீர்த்துப் போகும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது ஏற்றுக் கொள்ளதக்கதல்ல.

 

இந்நிலையில், மத்திய அரசு இந்த வழக்கில், மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதிடாமல், அக்கறையின்றி நடந்து கொண்டது கண்டனத்திற்குரியதாகும்.

 

உடனடியாக மத்திய அரசு இப்பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து, மீண்டும் தாழ்த்தப்பட்ட/ மலைவாழ் பழங்குடி மக்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கிட வேண்டுமென்பதை வலியுறுத்தியும் - வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் இணைக்க வலியுறுத்தியும்;

 

வருகிற 16-4-2018 திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில்  தி.மு.க., திராவிடர் கழகம், காங்கிரஸ், ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த முன்னணியினர், தோழர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.’’

சார்ந்த செய்திகள்