Skip to main content

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை... ராமதாஸ்

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

 

நரேந்திர மோடி அரசு முதன்முறையாக பதவியேற்ற பின்னர் 2015&ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட முழுமையான முதல் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், அக்கல்லூரிக்கு நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணிகளை மத்திய அரசு தொடங்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழ்நாட்டில் அடுத்த இரு ஆண்டுகளுக்குள் தமிழக அரசுடன் இணைந்து 6 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கனவு இலக்கை எட்டுவதற்கு உதவும் வகையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது ஆகும்.

 

Ramadoss


தமிழ்நாட்டிற்கு புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக முதன்முதலில் குரல் கொடுத்தது பாட்டாளி மக்கள் கட்சி என்ற வகையில் மத்திய அரசின் நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது. தில்லியில் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு கூட்டத்தில், நாடு முழுவதும் 75 மருத்துவக் கல்லூரிகளை ரூ.24,375 கோடி செலவில் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. அதற்கு முன் இரு கட்டங்களில் மத்திய அரசு அறிவித்த 82 புதிய மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று கூட தமிழகத்திற்கு கிடைக்காததை சுட்டிக் காட்டிய நான், புதிதாக அறிவிக்கப்பட்ட 75 மருத்துவக் கல்லூரிகளில் குறைந்தது 10 மருத்துவக்  கல்லூரிகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி ஆகஸ்ட் 30-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டேன். அதைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பிலும் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் பயனாக தமிழகத்திற்கு இப்போது 6 மருத்துவக் கல்லூரிகள் கிடைத்துள்ளன.


 

தமிழகத்தின் பின்தங்கிய  மாவட்டங்களான இராமநாதபுரம், விருதுநகர், இதுவரை மருத்துவக் கல்லூரிகள்  இல்லாத நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படவுள்ளன. அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளுடன் இணைத்து ஏற்படுத்தப்படவுள்ள இந்த கல்லூரிகள் அனைத்திலும் தலா 150 இடங்கள் இருக்கும். தமிழகத்தில்  ஏற்கனவே 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3250 இடங்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி, சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி, பெருந்துறை ஐ.ஆர்.டி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் உள்ள 350 இடங்கள் ஆகியவற்றுடன் புதிதாக அமைக்கப்படும் கல்லூரிகளின் இடங்களையும் சேர்த்தால் அரசுக் கல்லூரிகளில் மட்டும் 4,500 எம்.பி.,பி.எஸ் இடங்கள் இருக்கும். இதன்மூலம் அதிகபட்ச மருத்துவ இடங்கள் கொண்ட மாநிலம் என்ற பெருமை தமிழகத்துக்கு கிடைக்கும்.
 

தலா ரூ.325 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள இந்த மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் வரும்  2021-22 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வர வேண்டும். தமிழகத்தில் 6 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க இந்திய மருத்துவக் குழுவின் தொழில்நுட்பக்குழு அனுமதி அளித்துள்ள நிலையில், அடுத்தக் கட்டமாக அதிகாரமளிக்கப்பட்ட குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த நடைமுறைகள் அனைத்தும்  அடுத்த சில வாரங்களில் முடிவடைந்தாலும் கூட, கல்லூரிகளைத் தொடங்க அதன்பின்னர் ஒன்றரை ஆண்டுகள் மட்டும் தான் இருக்கும். இந்த அவகாசம் மிகவும் குறைவு என்பதால் மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். 6 மருத்துவக் கல்லூரிகளுக்குமான இடங்களை தமிழக அரசு அடையாளம் காட்டியுள்ள நிலையில், கல்லூரிகளின் கட்டுமானப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பிற அனுமதிகளை விரைந்து வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 

புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்ட பிறகும் திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்கள், புதிதாக உருவாக்கப்படவுள்ள  திருப்பத்தூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்கள், மாவட்டப் பிரிவினைக்குப் பிறகு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி சென்று விட்டதால் கல்லூரி இல்லாத காஞ்சிபுரம்  என மொத்தம் 12 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும். இம்மாவட்டங்களில்  புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான கால அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டு, அதன் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு அமைக்கவுள்ள 6 புதிய மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று கூட வட மாவட்டங்களில் இல்லாத நிலையில், தமிழக அரசு புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் போது வட மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
 

இவற்றுக்கெல்லாம் மேலாக, நரேந்திர மோடி அரசு முதன்முறையாக பதவியேற்ற பின்னர் 2015&ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட முழுமையான முதல் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி அறிவிக்கப்பட்டு வரும் பிப்ரவரி மாதத்துடன் 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன. அதற்கு முன்பாக  அக்கல்லூரிக்கு நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணிகளை மத்திய அரசு தொடங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.