இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோவிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர். குறிப்பாகக் காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பில் ஏழு பேர் விடுதலையை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த துரை வைகோ, ''உச்சநீதிமன்றத்தில் அவர்கள் மறுசீராய்வு மனு போட்டிருந்தாலும் எப்படி நமது உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைத்ததோ அதேபோல் உச்சநீதிமன்றத்திலும் தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஏழு பேர் விடுதலை என்பது எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியான தருணம். மறுசீராய்வு மனுவால் பாதிப்பு வரும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. காங்கிரசுடன் சில கருத்து வேறுபாடு இருக்கிறது. ஒவ்வொரு இயக்கத்திற்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கிறது.
எல்லா இயக்கங்களும் ஒரே நிலைப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. அவர்களுக்கு அவர்களுடைய கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. அதனால் மறுசீராய்வுக்குப் போயிருக்கிறார்கள். இதில் நாங்கள் ஒன்றும் சொல்ல முடியாது. இதனால் கூட்டணியில் பாதிப்பு வராது. மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் வேரூன்றக் கூடாது என்ற ஒத்தக்கருத்தில் நாங்கள் இருக்கிறோம். எனவே ஏழு பேர் விடுதலை காரணமாக ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாகக் கூட்டணியில் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பே கிடையாது. பாஜகவை பொறுத்தவரை அதிமுகவை பலவீனப்படுத்தி அவர்கள் மாற்று சக்தியாக உருவாக முயல்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த உண்மையைப் புரிந்துகொண்டு அதிமுக மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஓரணியாகத் திரண்டு இருந்தால் இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். அதே நேரத்தில் அந்த இயக்கத்திற்கு உண்டான கருத்துக்களைப் பற்றி நாங்கள் சொல்ல முடியாது'' என்றார்.