தி.மு.க. மா.செ.வும், முன்னாள் அமைச்சருமான சு.முத்துச்சாமி
கரோனா வைரஸ் ஊரடங்கு முடக்கத்தால் நாடு முழுக்க ஒட்டு மொத்த மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பு துன்ப துயரங்கள் ஈரோட்டிலும் இருந்தது. ஈரோடு விசைத்தறி, ஜவுளி மற்றும் மஞ்சள் உற்பத்தி என்ற விவசாய பொருளின் தலைநகராக உள்ளது. இவ்விரு தொழில்களை நம்பியே வாழும் ஏழை கூலி தொழிலாளர்கள் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ளது. அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் ரொக்கம், ரேசன் பொருட்கள் சில நாட்கள் மட்டுமே இவர்களின் வீட்டில் பயன் பெற்றது. ஆனால் யானை பசிக்கு சோளப் பொறி போலத்தான் இருந்தது அரசு நிவாரணம்.
இந்நிலையில் சில தன்னார்வலர்கள் உதவியும் மக்களுக்கு சென்றது. இதற்கடுத்து முக்கிய பங்கு ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க.வைசாரும். மா.செ.வும் முன்னாள் அமைச்சருமான சு.முத்துச்சாமி ஈரோட்டில் உள்ள ஒவ்வொரு வீதியாக அவரே சென்று வீடு வீடாக அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் என மொத்தம் ஒரு லட்சம் குடும்பத்திற்கு முத்துச்சாமி தலைமையிலான தி.மு.க.வினர் மக்களுக்கு வழங்கியுள்ளார்கள்.
அரசு கொடுத்த உதவி பொருட்கள் மட்டுமே மக்களுக்கு வழங்கி வந்த ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தென்னரசு, மக்கள் வாழ்நிலையை உணர்ந்து களத்தில் இறங்கியுள்ளார். தனது சொந்த பணம் ஒரு கோடி ரூபாய் செலவிட்டு ஈரோட்டில் உள்ள 70 ஆயிரம் ரேசன் கார்டுதாரர்களுக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் அரிசி, பருப்பு, மளிகை பொருள் என 14 ந் தேதி காலை முதல் வழங்க தொடங்கியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தென்னரசு, அமைச்சர் செங்கோட்டையன்
வியாழன் காலை மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் திட்டத்தை அமைச்சர் செங்கோட்டையனை வரவழைத்து தொடங்கி வைத்தார். "இரண்டு முறை எனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தவர்கள் ஈரோடு மக்கள். அவர்களுக்கு செய்ய வேண்டியது எனது கடமை. இப்போதைக்கு அரிசி மளிகை பொருட்கள் எனது சொந்த தொகையில் நானே வீடு வீட்டுக்கு நேரில் சென்று கொடுக்கிறேன். அதேபோல் வீடு தேடி வரும் எல்லோருக்கும் நிவாரண உதவியும் வழங்குகிறேன். 70 ஆயிரம் ரேசன் கார்டு மேலும் 30 ஆயிரம் என மொத்தம் 1 லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள். அடுத்தடுத்த 15 நாட்களுக்கொரு முறை மீண்டும் மக்களுக்கு இரண்டாவது கட்டமாக நிவாரண உதவி வழங்கவும் முடிவு செய்துள்ளேன்" என்றார்.
எம்.எல்.ஏ. தென்னரசு களத்தில் இறங்கியது போல் மற்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் அவர்களது சொந்த பணத்தை செலவழித்து அவர்கள் தொகுதி சார்ந்த மக்களுக்கு நிவாரண உதவிகள் கொடுத்தால் நல்லது.