![AIADMK headquarters seems without any crowds](http://image.nakkheeran.in/cdn/farfuture/wBRfPm03FD-v9PRfPommX0sU9onD8y-hobsIAoHFSvY/1619934762/sites/default/files/2021-05/admk-office-2.jpg)
![AIADMK headquarters seems without any crowds](http://image.nakkheeran.in/cdn/farfuture/mjhgFG6Ttenk08jbp9sAbdyQsDOt5ugkfRSz6TDF7-A/1619934762/sites/default/files/2021-05/admk-office-1.jpg)
![AIADMK headquarters seems without any crowds](http://image.nakkheeran.in/cdn/farfuture/bXGhJk2osUKvvNtv245IFp1dwDB45R7pfqGYTgfrmdA/1619934762/sites/default/files/2021-05/admk-office-3.jpg)
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளும், சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று (02/05/2021) எண்ணப்பட்டு, இன்றே முடிவுகளும் வெளியாகவுள்ளது. கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கையை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதைத் தொடர்ந்து, காலை 08.30 மணியளவில் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது.
தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மொத்தம் 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் மாநில காவல்துறையினர், துணை ராணுவப் படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, தேமுதிக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 3,998 பேர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி அதிக தொகுதிகளில் திமுக முன்னிலை வகிப்பதாக காணப்படுகிறது. அதேபோன்று, அதிமுகவின் அமைச்சர் வேட்பாளர்கள் சிலரும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகம் எந்தவித ஆரவாரமுமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.