புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும், அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்களில், விராலிமலை தவிர்த்து மற்ற 5 தொகுதிகளிலும் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. இதனால், அறந்தாங்கி, ஆலங்குடி உள்பட பல தொகுதிகளில் தொடர்ந்து போராட்டங்களை செய்தனர் அதிமுகவினர். அவர்கள் 16ந் தேதி பிரச்சாரத்திற்கு வந்த எடப்பாடியிடம் ‘வேட்பாளரை மாற்றுங்கள் எங்கள் முதல்வரே’ என்ற வாசகத்துடன் ஆலங்குடி தொகுதி, பனங்குளம் பாலத்தில் கொத்தமங்கலம் பாண்டியன் தலைமையில் திரண்டிருந்தனர். அதனை எடப்பாடி கண்டுகொள்ளாமல் சென்றதால், சாலை மறியல் செய்து கைதாகி விடுதலையான ர.ர.க்கள் மீது கீரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் பிறகும், வேட்பாளர்களை மாற்றவில்லை என்பதால், அதிமுக அதிருப்தியாளர் அனைத்துத் தொகுதியிலும் வேட்பு மனுத் தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளனர். திருமயம் தொகுதிக்கு, முன்னாள் ஒன்றிய சேர்மன் அழகு சுப்பையாவும், அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலைத் தொகுதிக்கு, மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் நெவளிநாதனும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். மேலும், ஆலங்குடி தொகுதிக்கு, கொத்தமங்கலம் கூட்டுறவுச் சங்கத் தலைவர் பாண்டியன், விராலிமலைத் தொகுதிக்கு, ஆலங்குடி தொகுதியின் முன்னாள் வேட்பாளரும் வழக்கறிஞருமான ஞான.கலைச்செல்வன், முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் மகள் தனலெட்சுமி ஆகியோரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யத் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது அறந்தாங்கி தொகுதியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்காத எம்.எல்.ஏ ரெத்தினசபாபதி கூறும்போது, “எனக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதை தெரிந்து கொள்ள முதலமைச்சர் எடப்பாடியிடமும், அமைச்சர் விஜயபாஸ்கரிடமும் நேரடியாக கேட்டேன். மழுப்பலாகச் சிரித்தனர். நான் அமமுக போய் வந்ததால், வாய்ப்பு மறுக்கப்பட்டதா என்றும் கேட்டேன் பதில் இல்லை. என்னிடம் என் தொகுதி மக்கள் இதே கேள்வியைக் கேட்கிறார்கள். அவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் அதனால் வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கான காரணம் சொல்லுங்கள் என்று கேட்டேன், அதற்கும் பதில் இல்லை. அதனால் காரணம் கேட்டு 20ந் தேதி முதல் விராலிமலை முருகன் சன்னதியில் இருந்து மாவட்டத்தில் உள்ள 6 தொகுதி மக்களையும் சந்திக்க பயணம் ஏற்பாடு செய்துள்ளேன். கடைசியாக மணமேல்குடி கோடியக்கரையில் (கோடியக்கரை காரியம் செய்யும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது) பயணத்தை முடிக்கிறேன். மாவட்டத்தில் உள்ள 6 தொகுதியிலும் அதிமுக தோற்றால் அதற்கு அமைச்சர் விஜயபாஸ்கரும் கட்சித் தலைமையுமே காரணமாவார்கள்" என்றார்.
இன்று விராலிமலையில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் நெவளிநாதன் கூறும்போது, “புதுக்கோட்டை மாவட்டத்தில் தகுதியான பழைய கட்சிக்காரர்களுக்கு வேட்பாளராகும் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதற்கு அமைச்சர் விஜயபாஸ்கரும் காரணம். அதனால் தான் நான் இங்கு வந்து போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கிறேன். எனது வேட்பு மனுவை கூட அதிகாரிகளை வைத்து தள்ளுபடி செய்யவும் செய்வார்கள். அதனால் தான் அனைத்தையும் வீடியோ பதிவுகள் செய்து வைத்திருக்கிறேன். நான் கட்சிக்கு கட்டுப்படாமல் வேட்பு மனுத் தாக்கல் செய்ததாக என்னை கட்சியில் இருந்து நீக்கும் முடிவு செய்வார்கள். அவர்களாக என்னை நீக்கும் முன்பே எனது மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் பதவி மற்றும் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவிவரை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பிவிட்டேன்" என்றார்.
இப்படி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அதிமுக அதிருப்தி வேட்பாளர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களைச் சமாதானம் செய்யும் முயற்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஈடுபட்டுள்ளார்.