தேனி அருகே உள்ள அரண்மனை புதூர் பகுதியில் தி.மு.க. சார்பில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த லட்சுமி, அவரை தூண்டிவிட்டதாக திமுக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கட்சியின் தேனி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி. சாய்சரணிடம் அ.தி.மு.க.வினர் புகார் அளித்துள்ளனர்.
தேனி மாவட்டம், போடி பகுதியில் உள்ள பூதிப்புரம் அ.தி.மு.க. பேரூராட்சி செயலாளர் ரவி, வர்த்தகப் பிரிவு இணைச்செயலாளர் செல்வ கணபதி, வழக்கறிஞர் ராஜா உள்ளிட்டோர் வழங்கிய புகார் மனுவில் கூறியிருப்பதாவது; தேனி அரண்மனை புதூர் ஊராட்சியில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடந்தது. அந்த கிராம சபைக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பூதிபுரம் கோட்டைமேடு தெருவைச் சேர்ந்த சிவா என்பவரின் மனைவி லட்சுமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொலை மிரட்டல் விடுத்துப் பேசினார். தி.மு.க. வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஆகியோரின் தூண்டுதலில் பேசியதாக கூறுகிறார். இதனால் மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரண் மற்றும் பழனி செட்டிபட்டி காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளனர். இது தேனி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.