தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அதிமுக வேட்பாளர் லோகிராஜன் தேம்பித் தேம்பி அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டியில் அதிமுக வேட்பாளர் லோகிராஜனை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ். நேற்று இறுதிக்கட்டப் பிரச்சாரம் செய்தார். இதற்காக நகரில் உள்ள பாலக்கோம்பை பிரிவில், அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கூட்டத்தைக் கூட்டினர். அங்கு பேசிய ஓ.பி.எஸ்., “லோகிராஜன் பாவம்யா; அப்புராணி அவருக்கு இந்த முறையாவது ஓட்டுப் போட்டு ஜெயிக்க வையுங்க” என்றார்.
அப்போது அருகில் இருந்த பொதுமக்களைப் பார்த்துக் கும்பிட்டபடி திடீரென உணர்ச்சிவசப்பட்டு தேம்பித் தேம்பி அழுதார் அத்தொகுதி வேட்பாளர். அவரை தேற்றி சமாதானம் செய்து பிரச்சாரத்தை முடித்தார் ஓ.பி.எஸ். மாவட்டம் முழுவதும் அதிமுகவினருக்கு உள்ள எதிர்ப்பால் வேட்பாளர் கலங்கி இருக்கலாம் என்று கட்சியினர் தெரிவித்தனர்.
ஆண்டிபட்டியில் பாலக்கோம்பை பிரிவில் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காக பெரியகுளம் வழியாக ஓ.பி.எஸ்., ஆண்டிபட்டி வந்தார். முன்னதாக பாலக்கோம்பை பிரிவுக்கு முன்னால் இருக்கும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார் ஓ.பி.எஸ். அங்கு கூட்டத்தைக் காண்பிப்பதற்காக அதிமுக நிர்வாகிகள், பிரச்சாரத்திற்குக் கூடிய மக்களை எம்.ஜி.ஆர். சிலைக்கு அழைத்துவந்தனர். பின்னர் பிரச்சாரப் பகுதிக்கு அதே மக்களை அதிமுகவினர் அழைத்துச் சென்றனர்.