
பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழு பெண் கவுன்சிலர்கள் இருவர் கடத்தப்பட்டதாக அதிமுக பிரமுகர் புகார் கொடுக்க, யாரும் கடத்தவில்லை எனப் பெண் கவுன்சிலர்கள் வாக்குமூலம் அளிக்க, சேலம் அரசியல் களத்தில் பரபரப்பும் சர்ச்சையும் ஒருசேர ஏற்பட்டது. சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஜெகநாதன் இருந்து வந்தார். மொத்தம் 13 கவுன்சிலர்கள் கொண்ட இந்த ஒன்றியத்தில் திமுக தரப்பில் 5, அதிமுக தரப்பில் 6, பாமக 1, இ.கம்யூ., 1 கவுன்சிலர்கள் உள்ளனர். ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர், தலைவர் பதவியைக் கைப்பற்றத் திட்டமிட்ட திமுக, தங்கள் தரப்புக்கு ஆதரவாக கவுன்சிலர்களை இழுக்கும் வேலைகளைச் செய்தது. அதில் வெற்றி கிடைத்ததை அடுத்து, ஒன்றியக்குழுத் தலைவர் ஜெகநாதன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது.

பனமரத்துப்பட்டி ஒன்றியத்தின் திமுக பொறுப்பாளரான பாரப்பட்டி சுரேஷ்குமாரை எப்படியும், அந்த ஒன்றியக்குழுவின் தலைவராக ஆக்கிவிட வேண்டும் என்ற மும்முரத்தில் கட்சியினர் ஜெகநாதனுக்கு எதிராக ஆதரவு திரட்டும் வேலைகளைக் கடந்த மூன்று மாதங்களாகச் செய்து வந்தனர். ஜெகநாதனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு கூட்டம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்த வேளையில், அதை எதிர்த்து ஜெகநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உயர்நீதிமன்றமோ அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை (ஜன. 21) நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தன. பந்து தனது கையைவிட்டு நழுவிச் சென்றதை உணர்ந்து கொண்ட ஜெகநாதன், தனது கட்சியைச் சேர்ந்த பூங்கொடி, சங்கீதா ஆகியோரை அழைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறைக்குச் சென்று கொண்டிருந்தார்.
ஏனெனில், திமுகவின் பாரப்பட்டி சுரேஷ்குமாருக்கு ஆதரவாக இவர்கள்தான் செயல்பட்டனர் என்பதை அறிந்திருந்தார் ஜெகநாதன். பழம் நழுவி பாலில் விழும் நேரத்தில் கவுன்சிலர்கள் மாயமானதை அறிந்த பாரப்பட்டி சுரேஷ்குமார் தரப்பு, குமாரபாளையம் அருகே கத்தேரி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த அதிமுக கவுன்சிலர்கள் பூங்கொடி, சங்கீதா ஆகியோரை மடக்கினர். 20க்கும் மேற்பட்ட கும்பல் ஜெகநாதன் காரை மறித்து, பெண் கவுன்சிலர்கள் இருவரையும் தங்களது காரில் ஏற்றிச்சென்றனர். தனக்கு எதிரான வாக்கெடுப்பு கூட்டத்தை முறியடித்துவிடும் நோக்கத்தில் மனக்கணக்குப் போட்டு வைத்திருந்த ஜெகநாதன், இந்தச் சம்பவத்தால் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். இதையடுத்து உடனடியாக குமாரபாளையம் காவல்நிலையத்தில் தன் கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர்களை திமுகவினர் கடத்திச்சென்று விட்டதாகப் புகார் அளித்தார்.

இதுகுறித்து ஜெகநாதன் கூறுகையில், ''நான் பனமரத்துப்பட்டி ஒன்றியத்தின் அதிமுக செயலாளராகவும், ஒன்றியக்குழுத் தலைவராகவும் இருக்கிறேன். என் மீது ஜன. 21ம் தேதியன்று நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்த வாக்கெடுப்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக, எங்கள் கட்சியைச் சேர்ந்த (அதிமுக) கவுன்சிலர்கள் 5 பேரை அழைத்துக் கொண்டு பவானி கூடுதுறையில் உள்ள கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வந்துவிடலாம் எனக்கருதி, கார்களில் சென்று கொண்டிருந்தோம். ஒரு காரில் நானும், பெண் கவுன்சிலர்கள் சங்கீதா, பூங்கொடி உள்ளிட்ட நான்கு பேரும் இருந்தோம். மற்றொரு காரில் இன்னும் இரண்டு கவுன்சிலர்கள் இருந்தனர். குமாரபாளையம் அருகே கத்தேரி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, 20க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் கார்களில் வந்து எங்களை வழிமறித்தனர்.
அந்தக் கும்பல் கையில் ஆயுதங்கள் வைத்திருந்தனர். கவுன்சிலர்கள் பூங்கொடி, சங்கீதா ஆகியோரை தலை முடியைப் பிடித்து இழுத்துச்சென்று அவர்கள் காரில் கடத்திச்சென்று விட்டனர். என்னை கீழே இறங்க விடாமல் கார் கதவை மூடிவிட்டனர். பிளேடு வைத்துக்கொண்டு மிரட்டினர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறேன். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார் ஜெகநாதன்.

இது ஒருபுறம் இருக்க, அதிமுக எம்எல்ஏக்கள் ராஜமுத்து, ஜெயசங்கரன், சுந்தரராஜன், நல்லதம்பி, பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழு அதிமுக செயலாளர் ஜெகநாதன், சேலம் ஒன்றிய செயலாளர் வையாபுரி மற்றும் கட்சியினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கடத்தல் சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு அதிமுக எம்எல்ஏ ஜெயசங்கரன் ஊடகங்களிடம் கூறுகையில், “கடத்தப்பட்ட பெண் கவுன்சிலர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. கடத்தல் கும்பல் தாக்கியதில் பெண் கவுன்சிலர்களுக்கு கழுத்திலும், கைகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. கவுன்சிலர்களுக்கே இந்தக் கதி என்றால், சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைதான் ஏற்பட்டுள்ளது. பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவர் மீது கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
திமுகவிற்கு தேர்தலில் ஜெயிக்க திராணி இல்லை. கடத்தப்பட்ட பெண் கவுன்சிலர்களின் கணவன்மார்கள் அரசுப் பணியில் உள்ளனர். அதை வைத்து திமுகவினர் மிரட்டி, கடத்திச்சென்று விட்டனர். இது ஒரு பிளாக்மெயில் அரசாங்கம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கிறோம். எங்கள் கவுன்சிலர்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.

இந்தப் பரபரப்புக்கு இடையே, பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது. அதில், கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் அதிமுக பெண் கவுன்சிலர்கள் பூங்கொடி, சங்கீதா மற்றும் அதே கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் நிவேதா உள்பட 10 பேர் ஜெகநாதனுக்கு எதிராக வாக்களித்தனர். இதையடுத்து, பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவர் பதவியை ஜெகநாதன் இழந்தார். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்குப் பிறகு அதிமுக கவுன்சிலர்கள் பூங்கொடி, சங்கீதா ஆகியோர் கூறுகையில், “எங்களை யாரும் கடத்திச்செல்லவில்லை. நாங்களாக சுய விருப்பத்தின்பேரில்தான் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்தோம்” என்று மட்டும் சுருக்கமாகக் கூறினர். அரசியல் சதுரங்கத்தில் அதிமுக ஒரு கணக்குப்போட, அதை திமுகவினர் முறியடித்து வெற்றி பெற்றுள்ளனர். இச்சம்பவம், சேலம் மாவட்ட அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.