Skip to main content

“எங்கள் வேகமும் விவேகமும் விரைவில் தெரியும்” - செங்கோட்டையன் 

Published on 28/01/2023 | Edited on 28/01/2023

 

admk sengottaiyan talk about erode east byelection

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு அணி வேட்பாளர் தேர்வும் சின்னம் கிடைப்பதிலும்  குழப்பம் நீடித்து வரும் நிலையில் தேர்தல் பணியை சென்ற இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது எடப்பாடி தரப்பு. கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஒவ்வொரு நாளும் ஈரோட்டுக்கு வந்து நிர்வாகிகளை சந்திப்பதும், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்திப்பதும் வழக்கமாக வைத்துள்ளார். 

 

அதன்படி 28 ஆம் தேதி(இன்று) ஈரோடு  பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எதிர்பார்த்துள்ளனர். அப்போது திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் எம்ஜிஆருக்கு திருப்புமுனையை உருவாக்கியதுபோல், இப்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் முடிவு எடப்பாடி பழனிசாமிக்கு மாபெரும் திருப்பத்தை கொடுக்கும். அதிமுக மகத்தான வெற்றிபெற்று எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும். இந்த தேர்தல் தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்கும். அதிமுக இந்த இடைத்தேர்தலில் தனித்து களம் காண்கிறது. எங்கள் கூட்டணியில் இணையும் கட்சிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார். 

 

அதிமுகவில் 98.5 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக்கொண்டு கட்சிப் பணியாற்றி வருகின்றனர். வாக்கு சேகரிக்கும் பணியை வெள்ளிக்கிழமை இரவே தொடங்கிவிட்டோம். பிற மாவட்டங்களில் இருந்து வந்துள்ள கட்சி நிர்வாகிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பணியில் எங்கள் வேகம், விவேகம் ஓரிரு நாள்களில் அனைவருக்கும் தெரியும். எங்களுக்குத்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆஜரான எம்.ஆர்.விஜயபாஸ்கர்; அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
nn

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

மேலும் இது தொடர்பாக மேலக்கரூர் பொறுப்பு சார்பதிவாளரும் கரூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதே சமயம் இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிடையே தலைமறைவாக கேரளாவில் பதுங்கி இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனிப்படை போலீசாரால் கடந்த 16 ஆம் தேதி (16.07.2024) கைது செய்யப்பட்டார். இத்தகைய பரபரப்பான சூழலில் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை என 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் தாங்கள் தொடர்ந்த வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என ஏழு நாட்கள் அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்திருந்தது. குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்குப் பின்னர் நீதிமன்ற நடுவர் பரத்குமார் இரண்டு நாட்கள் எம்.ஆர் விஜயபாஸ்கரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

Next Story

அதிமுக திமுக காரசார விவாதம்; வாக்குவாதத்தில் முடிந்த நகர் மன்ற கூட்டம்!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
DMK AIADMK political debate in Kallakurichi Municipal Council meeting

கள்ளக்குறிச்சி நகராட்சியில் சாதாரண நகர மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் நடைபெறுவதற்காக அனைத்து கவுன்சிலர்களுக்கும் ஏற்கனவே நகராட்சி கூட்டம் குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை கண்ட அதிமுக கவுன்சிலர்கள் தமிழகத்தையே உலுக்கிய கள்ளச்சாராயம் சம்பவத்தில் கள்ளக்குறிச்சியில் 67 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு ஒரு இரங்கல் தீர்மானம் இல்லாததாலும், மேலும் நகர மன்ற கூட்டத்தில் இரங்கல் தீர்மானத்தை எழுத்துப்பூர்வமாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கருப்பு சட்டை அணிந்து அதிமுக கவுன்சிலர்கள் நகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதை கண்ட சேர்மன் சுப்பராயலு  வாய்மொழியாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி தெரிவிக்கப்படும் என தெரிவித்து கூட்டத்தை தொடங்கினார்.

இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக நகரச் செயலாளரும், 11-வது வார்டு கவுன்சிலருமான பாபு, “கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றாமல் இரங்கல் தீர்மானம் இல்லாமல் இந்த கூட்டம் நடப்பதால் இதிலிருந்து நாங்கள் வெளியேறுகிறோம்” என்று கூட்டத்திலிருந்து வெளியேறினர். அப்போது நகராட்சி சேர்மன் சுப்புராயலு உடனடியாக எழுந்து மைக்கை பிடித்து மக்கள் முதல்வர் வாழ்க என கோஷம் எழுப்பினார்.

இதற்கு அதிமுக கவுன்சிலர்களும், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க...” என முழக்கம் எழிப்பினர். இதனால் திமுக கவுன்சிலர்களும், அதிமுக கவுன்சிலர்களும் தங்கள் தலைவர்கள் புகழைப் பாடிக்கொண்டு கோஷம் எழுப்பினர். மேலும் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஆக மாறி  பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது திமுக கவுன்சிலர்கள் தங்கள் ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லியும் அதிமுக கவுன்சிலர்கள் இந்த திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் வலுவாக கோஷம் எழுப்பி மேஜயை தட்டி பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டு அரங்கம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் கள்ளச்சாராயம் குடித்து  உயிரிழந்த பட்டியலின மக்களுக்கு விரோதமாக நகராட்சி ஆணையரும் தமிழக முதல்வரும் செயல்படுவதாக அதிமுக கவுன்சிலர்கள் கோஷம் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிமுக கவுன்சிலர் வெளியேறிய பின்பு திமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.