தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 12- ஆம் தேதி தொடங்கிய நிலையில், நாளையுடன் (19/03/2021) நிறைவடைகிறது. இதனால் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது தொகுதிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர். ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக உள்ள சிலர், தங்களுக்கு மீண்டும் கட்சி வாய்ப்பளிக்காததால், சுயேட்சையாகப் போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில், சுயேட்சையாகப் போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்த அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது அ.தி.மு.க. தலைமை.
இது குறித்து அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அ.தி.மு.க. கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில், சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து, சுயேட்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதோடு மட்டுமல்லாமல், கட்சியின் வேட்பாளரை தோற்கடிப்பேன் என்று செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்துள்ள காரணத்தாலும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்". இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.