நாளை நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலை தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் எப்படி எதிர்கொள்கின்றன என அ.தி.மு.க.வினரிடம் விசாரித்தபோது, அரவக்குறிச்சியில் அ.தி.மு.க., ஓட்டுக்கு 3,000 ரூபாய் பணம் கொடுத்தால் அதைவிட அதிகமாக 4,000 ரூபாய் பணம் கொடுக்க செந்தில்பாலாஜி ஏற்பாடு செய்துவிட்டார். அதனால் அரவக்குறிச்சியில் பண விநியோகத்தில் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. ஒட்டப்பிடாரத்தில் அமைச்சர் காமராஜ், "நான் திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலை சந்தித்தவன். கலைஞரின் தொகுதியிலேயே 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. ஜெயிக்கும் அளவிற்கு பணத்தை அள்ளி வீசினேன்.
ஒட்டப்பிடாரத்தில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வை வெற்றிபெற வைப்பேன்' என எடப்பாடிக்கே சேலஞ்ச் விட்டிருக்கிறார். அவருக்குப் போட்டியாக சி.வி.சண்முகமும் பண விநியோகத்தில் வேகம் காட்டுகிறார். இவர்களோடு சீனியர் தலைவரான வைத்தியலிங்கமும் பண விநியோகத்தில் முனைப்பு காட்டுகிறார். திருப்பரங்குன்றம் தொகுதிக்கு அரவக்குறிச்சி தேர்தல் களத்தில் இருக்கும் சுகாதாரம் விஜயபாஸ்கர் மூலம் பணத்தை விநியோகிக்க உத்தரவிட்டுள்ளார் எடப்பாடி. சூலூர் தொகுதியில் ஒன்மேன் ஷோவாக ஒட்டுமொத்த பண விநியோகத்தையும் எஸ்.பி.வேலுமணி மேற்கொள்கிறார்.
இந்த பண விநியோகத்தைத்தான் அ.தி.மு.க. தனது பலமாகப் பார்க்கிறது. இதன்மூலம்தான் சூலூர், ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் அ.தி.மு.க. ஜெயிக்கும், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் கடும் போட்டியை ஏற்படுத்துவோம் என்கிற அ.தி.மு.க.வினர், அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜியை வீழ்த்த, அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க.வும் கைகோர்த்திருக்கிறது'' என்கிறார்கள்.