Skip to main content

டிடிவி தினகரன் கட்சி தொடக்க விழாவில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பார்கள் - செந்தில் பாலாஜி

Published on 13/03/2018 | Edited on 13/03/2018
senthil


டிடிவி தினகரன் கட்சி தொடக்க விழாவில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பார்கள் என டி.டி.வி.தினகரன் அணி ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அ.தி.மு.க. கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வருவதற்கு முன்பாக இடைக்கால ஏற்பாடாக ஒரு புதிய கட்சியை வரும் 15ம் தேதி மதுரை மேலூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் டி.டி.வி. தினகரன் அறிவித்து கட்சியை, கொடியை அறிமுகப்படுத்துகிறார்.

இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பதால் கட்சி தாவல் தடை சட்டத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. மேலும் எம்.எல்.ஏ.க்கள். தகுதி நீக்கம் தொடர்பான வழக்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். தமிழகத்தில் இன்னும் ஒரு மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருகிறது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை அமைச்சர் ஜெயக்குமார் பானை, சட்டி சின்னம் என கருத்து கூறியிருக்கிறார். அ.தி.மு.க. கட்சி, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். கட்சியையும், சின்னத்தையும் மீட்டெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்